பாலு மகேந்திரா நினைவுநாள்:  சினிமாவுக்காக வாழ்ந்த தனிநபர் இயக்கம்   

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பல படைப்பாளிகளால் தந்தை என்று அழைக்கப்படுபவர் இந்திய சினிமாவின் தலை சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவாளர்களில் ஒருவரும் .சினிமாவுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தனிநபர் இயக்கம் –இப்படிப் பல பெருமைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டிய இயக்குநர் பாலு மகேந்திரா. அவர் நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு (பிப்ரவரி 13) ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

திரைக் கலையின் காதலன்

இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலிருந்தே பல சர்வதேச படங்களையும் ‘பதேர் பதஞ்சலி’ உள்ளிட்ட இந்திய கிளாசிக் படங்களையும் பார்த்து சினிமா என்னும் கலை மீது காதல் வயப்பட்டவர் பாலு மகேந்திரா. அவர் வாழ்வின் இறுதிக் கனம் வரை சற்றும் தளர்வடையாத காதல் அது . தளர்வடையவில்லை என்று சொல்வதைவிட உறுதியடைந்துகொண்டே இருந்தது என்று சொல்லலாம். வணிக அழுத்தங்களுக்கு ஆட்படாமல் தான் விரும்பிய நல்ல சினிமாவுக்காகவே வாழ்ந்தார்.

முறையாகத் திரைக் கல்வியைப் பயின்று ’பனிமுடக்கு’ (1972) என்னும் மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராகத் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்தார். இயக்குநராவதற்கு முன் மலையாளம். தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இருபதுக்கு மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்றுவிட்டார். அவர் இயக்குநராகக் கால் பதித்தது கன்னட மொழியில். அவர் இயக்குநராக அறிமுகமான ‘கோகிலா’ 1977இல் வெளியானது. கமல் ஹாசனின் அரம்பகாலப் படங்களில் முக்கியமான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்தப் படம் 1980களில் தமிழ் சினிமாவில் வெற்றிவாகை சூடிய நடிகர் மோகனின் அறிமுகப் படமும்கூட.

தமிழில் தொடங்கிய பயணம்

மகேந்திரன் இயக்கிய தமிழ் சினிமாவின் தலைசிறந்த கிளாஸிக் படங்களில் ஒன்றான ‘முள்ளும் மலரும்’ படத்தின் ஒளிப்பதிவாளராகத்தான் தமிழ் சினிமாவுக்கு வந்தார் பாலு மகேந்திரா. அதற்கு அடுத்த ஆண்டில் வெளியான ‘அழியாத கோலங்கள்’ படத்தின் மூலம் தமிழிலும் இயக்குநராகத் தடம் பதித்தார்.

மணி ரத்னம் இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தபோதே தன் முதல் படத்துக்கு பாலு மகேந்திராதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். அப்போது ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் பல படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த பாலு மகேந்திரா அந்த அறிமுக இயக்குநரின் திறமையைச் சரியாகவே கணித்திருந்தார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் மணி ரத்னத்தின் அறிமுகப் படமான ‘பல்லவி அனு பல்லவி’ (1983) கன்னட சினிமாவின் தரமான படைப்புகளில் ஒன்றாக நிலைத்துவிட்டது. அதன் பிறகு இந்தியா முழுவதும் புகழைப் பெற்ற இயக்குநராக உயர்ந்தார் மணி ரத்னம். திறமையாளர்களைத் தரமான படைப்பாளிகளை அடையாளம் காணும் திறன் பாலு மகேந்திராவுக்குத் தொடக்கத்திலிருந்தே இருந்தது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

இயற்கை ஒளியும் உண்மையின் நெருக்கமும்

ஒரு ஒளிப்பதிவாளராக இயற்கையான ஒளிகளைக் கொண்டே சிறந்த காட்சி அனுபவத்தை உருவாக்குவதில் அசாத்தியமான வல்லமை பெற்றிருந்தார் பாலு மகேந்திரா. அவருடைய ஒளிப்பதிவில் படம் இயக்க பல மொழிகளைச் சேர்ந்த இயக்குநர்கள் விரும்பினர். ஆனால் ஒரு இயக்குநராக நிலைபெற்றுவிட்ட பிறகு மற்ற இயக்குநர்களின் படங்களுக்கு பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்யவில்லை. தமிழ், மலையாளம். தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் 23 திரைப்படங்களை இயக்கினார் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய படங்கள் யதார்த்தத்தையும் இயல்பையும் பதிவு செய்து நிஜவாழ்க்கைக்கும் மிக நெருக்கமான படங்களாக இருந்தன. அவருடைய படங்களில் சண்டைக் காட்சிகளையும் செட் போடப்பட்டு எடுக்கப்பட்ட டூயட் பாடல்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ் சினிமாவில் அவரளவுக்கு யதார்த்தத்துக்கு நெருக்கமான படங்களைக் கொடுத்தவர் வேறொருவரில்லை. வணிக சினிமாவில் இயங்கிக்கொண்டே இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார் என்பதுதான் இதில் மிக முக்கியமான அம்சம்.

‘மூடு பனி’, ‘மூன்றாம் பிறை’ போன்ற கிளாசிக் அந்தஸ்து பெற்றுவிட்ட படங்களாகட்டும் ‘வீடு’, ‘சந்த்யாராகாம்’ உள்ளிட்ட கலைப் படங்களுக்கு மிக நெருக்கமான படைப்புகளாகட்டும், ’மறுபடியும்’ ’வண்ண வண்ண பூக்கள்’, ‘ஜூலி கணபதி’ போன்ற மனித உறவுகளைச் சுற்றி அமைந்த படங்களாகட்டும் ’நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘சதிலீலாவதி’ உள்ளிட்ட கலகலப்பை மையமாகக் கொண்ட படங்களாகட்டும் அனைத்திலும் உண்மைக்கும் இயற்கைக்கும் நெருக்கமானதன்மை என்னும் பாலு மகேந்திராவின் முத்திரை அழுத்தமாகப் பதிந்திருக்கும்.

சிறந்த இலக்கிய வாசகர்

படைப்பாளியாக மட்டுமல்லாமல் தலை சிறந்த வாசகராகவும் இருந்தார் பாலு மகேந்திரா. அவருடைய படங்கள் சினிமாவின் ஜிகினாக்களையும் மசாலாக்களையும் கிட்டத்தட்ட முழுமையாகத் தவிர்த்திருந்ததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்த முக்கியமான இலக்கிய நூல்களை வாசித்து அவற்றைத் திரைக்கதையாக்கவும் திரைவடிவம் கொடுக்கவும் முயற்சித்துவந்தார். சில முயற்சிகள் வெற்றிபெறவும் செய்தன. இருந்தாலும் ஒரு நல்ல சிறுகதையையோ நாவலையோ அதற்கு இணையான நல்ல சினிமாவாக மாற்ற முடியாது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். ஏனென்றால் ‘ஒரு கதை ஒரு நல்ல நாவலாக உருப்பெற்றுவிட்டால் அக்கதை அதற்கான மிகச் சரியான ஊடகத்தை ஏற்கெனவே கண்டடைந்துவிட்டது அதை இன்னொரு ஊடகமான சினிமாவுக்கு அதே அளவு சிறப்புடன் கடத்த முடியாது’ என்று அவர் கூறியிருப்பதாக அவருடைய தலைசிறந்த சீடர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார்.

இருந்தாலும் இலக்கியத்தையும் திரை ஊடகத்தையும் இணைக்கும் இடைவிடாக் கண்ணியாகத் தொடர்ந்து செயல்பட்டுவந்தார். வாசிப்பு பழக்கம் இருப்பவர்களையே தனது உதவி இயக்குநர்களாகச் சேர்த்துக்கொண்டார். அவரிடம் உதவியாளராகச் சேர விரும்புபவர்களுக்கு அளிக்கப்படும் முதல் பணி முக்கியமான நவீன இலக்கிய நூல்களைப் படித்து அது பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதும் நாவல்களின் அத்தியாயங்கள், சிறுகதைகளுக்குத் திரைக்கதை எழுதுவதும்தான்.

திரைவடிவம் பெற்ற சிறுகதைகள்

புத்தாயிரத்தின் தொடக்கத்தில் தொலைக்காட்சி ஊடகத்தில் அடி எடுத்து வைத்தபோது பல எழுத்தாளர்களின் நல்ல சிறுகதைகளை அரை மணிநேர தொலைக்காட்சிப் படங்களாக ‘பாலு மகேந்திரா கதை நேரம்’ என்னும் பெயரில் இயக்கினார். இப்படியாக 50க்கு மேற்பட்ட சிறுகதைகள் அவரால் திரைவடிவம் பெற்று இன்னும் பரவலான மக்களைச் சென்றடைந்தது. இவற்றில் பெரும்பாலான கதைகள் தமிழ்ச் சமூகம் அன்று பொதுவில் உச்சரிக்கவே தயங்கிய கருப்பொருள்களைப் பேசுபொருளாகக் கொண்டிருந்தன. ஆனால் ’பாலுமகேந்திரா கதை நேரம்’ தமிழ்க் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பதற்குக் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக் காலம் அது நீண்டது என்பதே சான்று.

இறுதிவரை ஓயாத படைப்பு மனம்

பாலா, சீனு ராமசாமி, வெற்றிமாறன், ராம், பாடலாசிரியர் நா.முத்துகுமார் என்று தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளையும் சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்றுவந்த பேராளுமைகள் பலர் பாலு மகேந்திராவின் பாசறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள். தன் காலத்துக்குப் பிறகு தரமான திரைப்படங்கள் தமிழில் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த அரிதான படைப்பு மேதைகளில் ஒருவராக விளங்குகிறார் பாலு மகேந்திரா. அதே நேரம் அவருக்குள் இருந்த படைப்பாளி இறுதிவரை ஓயவில்லை. ஒரு இயக்குநராக அவருடைய கடைசிப் படமும், நடிகராக அறிமுகப் படமுமான ‘தலைமுறைகள்’ அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வெளியானது. அதற்கு முன்பே கடுமையான உடல்நல பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தாலும் இறுதிவரை சினிமாவைக் கைவிடாத திரை நேசராக இருந்தார். தான் இயக்கிய அனைத்து படங்களுக்கும் தானே ஒளிப்பதிவாளராகவும் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றிய ஒரே படைப்பாளி இந்திய சினிமாவிலேயே வேறு யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை ஆகிய நான்குக்கும் இடையே கச்சிதமான ஒத்திசைவு இருந்தால்தான் நல்ல சினிமாவை உருவாக்க முடியும் என்பது அவருடைய ஆழமான நம்பிக்கையாக இருந்தது. இசையைத் தவிர மற்ற மூன்றையும் அனைத்துப் படங்களுக்கும் அவரே செய்தார். இசைக்கு மட்டும் தன் சிந்தனைக்கு மிக நெருக்கமான துணையாக அவர் அடையாளம் கண்டுகொண்ட இளையராஜாவைப் பயன்படுத்தினார். பாலு மகேந்திரா இயக்கிய முதல் இரண்டு படங்கள் தவிர மற்ற அனைத்துக்கும் இளையராஜாவே இசையமைத்தார்.

திரைப்படம், தொலைக்காட்சிப் படங்கள் ஆகியவற்றைப் படைப்பதோடு திரைப்பட மாணவர்களுக்குப் பாடமெடுக்கும் ஆசிரியராகவும் செயல்பட்டிருக்கிறார். ’சினிமா பட்டறை’ என்னும் பெயரில் திரைப்படப் பள்ளி ஒன்றை சென்னையில் நடத்திவந்தார்.

இப்படித் தரத்திலும் படைப்பு நேர்மையிலும் சமரசம் செய்துகொள்ளாத அரிதான படைப்பாளியாகவும் தலைசிறந்த ஒளிப்பதிவாளராகவும் தேர்ந்த வாசகராகவும் சினிமாவை நேசிப்பவராகவும் இலக்கியத்தையும் சினிமாவையும் இணைக்கும் புள்ளியாகவும் தனக்கு பிந்தைய தலைமுறைகள் பயனடையப் பல சிறந்த படைப்பாளுமைகளை உருவாக்கிச் சென்ற ஆலமரமாகவும் விளங்கிய பாலு மகேந்திரா இந்திய சினிமாவின் விலைமதிப்பில்லா ரத்தினம். தமிழ் சினிமா போற்றிக் கொண்டாட வேண்டிய பொக்கிஷம். சினிமாவை நேசிக்கும் இறுதி மனிதன் இருக்கும் வரை பாலு மகேந்திரா நினைவுகூரப்படுவார் என்பதில் ஐயமேயில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE