வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் - துஷாரா விஜயன்

By செய்திப்பிரிவு

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள 'ஜெயில்' படத்தை இயக்கி முடித்துள்ளார் வசந்தபாலன். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் தயாரிப்பாளர் சென்னை வந்தவுடன், படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்படவுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். இதனைத் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். விருதுநகரில் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து 'அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்' என்னும் தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

இந்தப் படத்தின் நாயகனாக அர்ஜுன் தாஸ், நாயகியாக துஷாரா விஜயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிவித்து வருகிறது படக்குழு. விரைவில் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு, படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE