மனைவி, குழந்தைகள், குடும்பம்: மனம் திறந்த கௌதம் மேனன்

By செய்திப்பிரிவு

தனது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்துப் பேசியுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.

கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நாயகனாக நடித்து வரும் படம் 'ஜோஷ்வா'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் கௌதம் மேனன். இந்த இரண்டு படங்களையும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இவர் இயக்குநராக அறிமுகமாகி சுமார் 20 ஆண்டுகள் ஆகின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், எதிலுமே தன் குடும்பத்தை அழைத்து வரமாட்டார் கெளதம் மேனன். மேலும், தனது குடும்பத்தினர் புகைப்படத்தையும் வெளியிட்டதில்லை. தற்போது திரைக்கு வந்து 20 ஆண்டுகளை முன்னிட்டு, நீண்ட பேட்டி அளித்துள்ளார்.

அதில் தனது குடும்பத்தினர் குறித்தும் பேசியுள்ளார் கெளதம் மேனன்.

அந்தப் பகுதி:

மனைவி, குழந்தைகள் குறித்து?

நான் காதலில் விழாமல் இருந்திருந்தால் என்னால் இன்று திரைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. எனது உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதை வைத்தே என் வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் நான் செய்திருக்கிறேன். எனது துணையைத் தேடியதிலிருந்து, திருமணம் செய்தது, படங்கள் எடுத்தது என்று எல்லாமே அப்படித்தான்.

ஒன்று முழு நேர இசைக் கலைஞனாக வேண்டும் அல்லது கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்று இரண்டு விஷயங்களைத்தான் முதலில் யோசித்து வைத்திருந்தேன். அதிர்ஷ்டவசமாக எனது விளையாடும் திறன் எனது மூன்று மகன்களுக்கும் வந்திருக்கிறது. மூன்று பேருமே அற்புதமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள். அடுத்த கட்டத்துக்குச் சென்று, தொழில் முறையில் அவர்களால் ஆட முடியும் என்று நம்புகிறேன். திரைத்துறையில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதை இப்போது தீர்மானிக்க முடியாது.

தனது குடும்பம் குறித்து அதிகமாகப் பொதுவில் பேசாதது குறித்து?

ஏனென்றால் எனக்கு அப்படி இருப்பதுதான் பிடித்திருக்கிறது. இசை வெளியீட்டுக்கு என் மனைவியும் மகன்களும் வருவதே அரிதுதான். ஆனால், என்ன நடந்தாலும், என்றுமே என் பின்னால் துணை நிற்பார்கள். சமீபத்தில் சில பதின்ம வயது இளைஞர்களை வைத்து ஒரு காட்சி எடுக்க நினைத்தேன். எனது மூத்த மகன் ஆர்யா அவரது நண்பர்களை அழைத்து வந்து உதவி செய்தார். ஆனால், அவர் கண்டிப்பாக கேமராவுக்கு முன் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். தனது கல்வியையும், விளையாட்டு ஆர்வத்தையும் கச்சிதமாகக் கையாளுபவர் அவர். எல்லாம் அவரே பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும் என்று அவரை விட்டுவிடலாம் என்பதையே நான் அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.

எனது மனைவி ப்ரீத்தீதான் எனது மிகப்பெரிய விமர்சகர். எனது அம்மாவின் சோதனையையும் எனது ஒவ்வொரு படமும் தாண்டியாக வேண்டும். சில சமயங்களில் என் அம்மாவுக்கு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. 'காக்க காக்க' படத்தில் தூது வருமா பாடலை நான் படமாக்கிய விதம் அவருக்குப் பிடிக்கவில்லை. இது எல்லாவற்றையும் நான் என் மனதுக்குள் ஏற்றியிருக்கிறேன். எனவே, பெண் கதாபாத்திரங்களை எழுதித் திரையில் நான் சித்தரிக்கும் விதத்தில் எனக்கே தெரியாமல் இந்த விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என நினைக்கிறேன்.

ஆரம்பத்தில் எனது திரைக்கதைகளை என் மனைவியிடம் படிக்கத் தருவேன். ஆனால் 'வாரணம் ஆயிரம்' படப்பிடிப்பு நடக்கும்போது அது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பிரசாத் ஸ்டுடியோவுக்குள் எனது வீட்டைப் போலவே அரங்கம் அமைத்தேன். வயதான சூர்யா கதாபாத்திரம் மறைந்த எனது தந்தைக்கு எனது அஞ்சலி என்பது என் குடும்பத்தினருக்குத் தெரியாது. படம் வெளியானவுடன் அதைப் பார்த்தது அவர்கள் அனைவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. என் அம்மாவைத் தவிர. அவர் எப்போதும் போலச் சலனமில்லாமல், படம் நன்றாக இருந்தது என்று முடித்துக் கொண்டார்.

இவ்வாறு கௌதம் மேனன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE