முதல் பார்வை: பாரிஸ் ஜெயராஜ்

By க.நாகப்பன்

கானா பாடகனுக்குக் காதல் முளைத்தால் அவர் அப்பாவால் அதில் ஆபத்து நேர்ந்தால் அதுவே 'பாரிஸ் ஜெயராஜ்'.

கானா பாடகராக வலம் வரும் சந்தானம் ஆர்.எஸ்.சிவாஜியின் மகளை சின்சியராய் காதலிக்கிறார். இந்தக் காதலைப் பிரிக்க வேண்டும் என்று நினைக்கும் ஆர்.எஸ்.சிவாஜி ஒரு வழக்கறிஞரின் உதவியை நாடுகிறார். அவரின் ஐடியாவுக்குப் பலன் கிடைக்கிறது. காதலர்கள் பிரிகிறார்கள். தன் தந்தைதான் அந்தக் காதலைப் பிரித்துவிட்டார் என்பதால் சந்தானம் கடுப்பாகிறார். அந்த நேரத்தில் கல்லூரி மாணவி அனைகா சோதியால் இன்னொரு காதல் முளைக்கிறது. இந்தக் காதல் கைகூடியதா, இதில் அப்பா செய்த சொதப்பலும், குழப்பமும், ஆபத்தும் என்ன, அனைகாவின் முன்னாள் காதலன் என்ன ஆனார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'ஏ1' படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்தானம்- ஜான்சன் கூட்டணி இணைந்துள்ள இரண்டாவது படம் இது. சந்தானம் இனி வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிப்பது சிறந்ததாக இருக்கும். இன்னும் பெண்கள் பின்னால் சுற்றும் காதலராக எத்தனை படங்களில்தான் பார்ப்பது? டான்ஸ் மூவ்மென்ட்டுகளில் சந்தானம் சிரமப்படுவதும் தெரிகிறது. வழக்கம்போல் ரைமிங்கில் பேசி அசத்துவார். இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோவின் அப்பா, வில்லன், அடியாள் என்று அத்தனை பேரும் அதீதமாக ரைமிங்கில் பேசியதால் அவர்களை விட ரசிகர்கள் பாடுதான் திண்டாட்டம்.

அனைகா சோதிக்கும் நடிப்புக்கும் ஏழாம் பொருத்தம். நடிப்புக் கலை கைவரப்பெறாமல் திணறியுள்ளார். மாறன், சேது, சேஷு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், கலக்கப்போவது யாரு வினோத் என அனைவரும் கதாபாத்திரத்துக்குத் தேவையான பங்களிப்பில் குறை வைக்கவில்லை.

படத்தின் பெரிய பலம் வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் கட்டமைப்பு. சமயங்களில் குழப்பத்தைக் கொடுத்து பின் காமெடியாக மாற்ற அந்தக் கதாபாத்திரம் வளைந்து கொடுத்துள்ளது. தெலுங்கு நடிகர் மாருதி இதில் நடித்துள்ளார். தமிழ் தெரியாத நடிகர் என்பதால் அவர் உள்வாங்கி நடிப்பதில் போதாமை உள்ளது. அவரின் ரியாக்‌ஷன்கள் தாமதமாகவே வெளிப்படுவதால் ரசிக்க முடியவில்லை. தமிழ் தெரிந்த நடிகர் மட்டும் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்.

சந்தோஷ் நாராயணின் இசையில் முதல் மூன்று பாடல்களும் தேவையில்லாத இடங்களில் வந்து, உள்ளேன் ஐயா என்று ஆஜராகி அவஸ்தை தருகின்றன. அவற்றை அப்படியே கட் செய்திருக்கலாம். பின்னணி இசையும், ஆர்தல் வில்சனின் ஒளிப்பதிவும் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

அப்பாவி அடப்பாவி, எருக்கஞ்சேரி பாண்டிச்சேரி, சரக்கடிச்சே சங்கு ஊதுற என்று ரைமிங் வசனங்களில் வூடு கட்டி அடிக்கிறார் இயக்குனர் ஜான்சன். ஆனால், அவை ஓவர் டோஸாக இருப்பதுதான் பலவீனம். சந்தானம் ஏன் அவர் தந்தையை டேமேஜ் செய்கிறார், தந்தையை மதிக்காமல் தொடர்ந்து டீஸ் செய்வது ஏன் என்பதற்குப் போதுமான காரணங்கள் இல்லை. மிகப்பெரிய உறவுச் சிக்கலைக் கூறி அதன் முடிச்சை காமெடியாக அவிழ்த்து வடபோச்சே என்று சொல்ல வைத்துள்ளார் இயக்குநர்.

முதல் பாதி சகிப்புத்தன்மைக்கு விடப்பட்ட சவால், இரண்டாம் பாதி சிரிக்க வைக்கும் நகைச்சுவை என்று 'ஏ1' படத்தின் டெம்ப்ளேட் கூட மாறவில்லை. ஆனாலும், 'ஏ1', 'இனிமே இப்படித்தான்' ஆகிய சந்தானம் படங்களின் கதைகளையே கலைத்துப் போட்டு காமெடி ட்ரீட்மென்ட்டில் சாமர்த்தியம் காட்டியுள்ளார் ஜான்சன். அந்த விதத்தில் 'பாரிஸ் ஜெயராஜ்' பார்க்க வேண்டிய படம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE