விஜய்யின் பணிவு ஏற்படுத்திய தாக்கம்: பிரியங்கா சோப்ரா வெளிப்படை

By செய்திப்பிரிவு

தனது சுயசரிதையில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து எழுதியிருக்கிறார் பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ரா.

2002-ம் ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய், பிரியங்கா சோப்ரா, நாசர், ரேவதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தமிழன்'. இந்தப் படத்தின் மூலமாகவே நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. பின்பு பாலிவுட்டில் அறிமுகமாகி, ஹாலிவுட்டில் வெப் தொடர்கள், படங்கள் என நடித்து உலகளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் பிரியங்கா சோப்ரா.

தற்போது தனது வாழ்க்கையை 'Unfinished' என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இதில் திரையுலகில் தனது அனுபவங்கள், பாலியல் சீண்டல்கள் என பல விஷயங்களைப் பேசியுள்ளார். இதில் தனது முதல் படத்தின் நாயகனான விஜய் குறித்து எழுதியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"திறமையான அன்பான விஜய்யுடன் முதல் படம் நடித்தது மிகப்பெரிய உந்துதல் தரும், வழிகாட்டும் அனுபவமாக இருந்தது. அவர் கண்ணில் தென்படுவாரா என்று பார்க்கவே பல ரசிகர்களைத் தடுப்புகளைத் தாண்டி பல மணி நேரம் காத்திருப்பார்கள்.

வெளிப்புறப் படப்பிடிப்பில் 15 மணி நேரம் உழைத்த பிறகும் அவருக்காகக் காத்திருந்த ரசிகர்களை அவர் சந்திப்பார். அடுத்த ஒன்றரை மணி நேரம் புகைப்படம் எடுக்கச் செலவிடுவார். விஜய்யின் பணிவும் பெருந்தன்மை என்னுள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து நியூயார்க் பொது நூலகத்தில் 'குவாண்டிகோ' படப்பிடிப்பு நடந்தது. பல மக்கள் கூட்டமாக அதை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர்.

அங்கு நின்று எனது உணவு இடைவேளையின் போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட போது நான் முதன் முதலில் என்னுடன் நடித்த நடிகரை, அவர் காட்டிய முன்னுதாரணத்தை நினைத்துப் பார்த்தேன்”

இவ்வாறு பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE