நான்கு விதமான காதல் கதைகளின் தொகுப்பே 'குட்டி ஸ்டோரி'.
'எதிர்பாரா முத்தம்', 'அவனும் நானும்', 'லோகம்', 'ஆடல்-பாடல்' என நான்கு கதைகளை முறையே கௌதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர்.
பாவக்கதைகளுக்குப் பிறகு கௌதம் மேனன் நடித்து இயக்கிய இன்னொரு ஆந்தாலஜி 'எதிர்பாரா முத்தம்'. வழக்கமும் பழக்கமுமான கதைதான். அதைக் கொடுத்த விதத்தில் கௌதம் எப்போதும் போல் பாஸ்மார்க் வாங்குகிறார்.
கல்லூரிப் பருவத்தில் ஆதியின் (கௌதம் மேனன்) காதல் பிரேக் அப்பில் முடிகிறது. இதனிடையே தன் நட்புக்கு அடையாளமாய் தன் தோழி மிர்லாலினிக்கு (அமலாபால்) உணவு சமைத்துப் பரிமாறி, நன்றி தெரிவித்து, எதிர்பாரா முத்தம் தருகிறார். அந்த முத்தம் அவர்களுக்குள் இரு வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது மீதிக் கதை.
தன்( படங்களின்!?) டிரேட் மார்க் காதல் டெம்ப்ளேட்டை இதிலும் கலந்துகட்டி அழகியலுடன் தந்துள்ளார் கௌதம் மேனன். இளம் வயது கௌதம் மேனனாக வினோத் அப்படியே கௌதமின் மேனரிசங்களை பிரதிபலித்தார். பார்க்கும் விதம் மட்டும் மாறுகிறது. அமலாபால் இயல்பான நடிப்பில் கவர்கிறார். கௌதம் மேனனின் பாவனைகள் காதலுடன் இல்லாமல் செயற்கையாக இருந்தது. ரோபோ ஷங்கரின் இடையீடு ரசிக்கும்படி இருந்தது.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, கார்த்திக்கின் இசை, பிரதீப் ராகவின் கட்டிங் எனத் தொழில்நுட்ப அம்சங்கள் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளன.
ஒரு பெண்ணுடன் கடைசிவரை ஒரு ஆண் நட்பாகவே இருக்க முடியாதா, முதல் காதலின் பிரிவுக்குப் பிறகு அடுத்த காதலுக்கு ஒரு ஆண் எந்தத் தயக்கமுமின்றித் தாவும்போது உடனிருக்கும் தோழி எதை இழக்கிறார், தோழி காதலியாகக் கூடாதா, அதில் இருக்கும் சிக்கல் என்ன என்ற உறவுச் சிக்கல்களை மிகச் சரியாகக் கையாண்டுள்ளார் இயக்குநர் கௌதம் மேனன். நடிகர் கௌதம் மேனனைக் காட்டிலும் டைரக்டர் டச்சில் லைக்ஸை அள்ளிக் கொள்கிறார். அந்த விதத்தில் கௌதம் பெரிதாக ஏமாற்றவில்லை.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ் நடித்த குறும்படம் அவனும் நானும். கல்லூரி படிக்கும்போதே காதலாகி கசிந்துருகி கர்ப்பம் ஆகிறார் ப்ரீத்தி (மேகா ஆகாஷ்). கர்ப்பம் என்று காதலன் விக்ரமுக்குத் (அமிதாஷ் பிரதான்) தெரிவித்த அடுத்த நொடி காதலன் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிறது. இந்த ஆண்களே இப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வந்தவராய் கர்ப்பத்தைக் கலைக்குமாறு தோழி ஆரியா (ஸ்ருதி) ஆலோசனை கூறுகிறார். மருத்துவமனைக்குச் சென்றால் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதற்குப் பிறகும் தன் கொள்கையில் உறுதியாய் இருக்கிறார் மேகா ஆகாஷ். இறுதியில் கிடைக்கும் ஒரு ஆறுதல் மட்டும் அவருக்கான தேறுதலாய் அமைகிறது.
மதுவின் இசை, அரவிந்த் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங் ஆகியவை படத்துக்குச் சாதக அம்சங்கள். மேகா ஆகாஷ் நன்றாக நடித்துள்ளார். இரண்டு ட்விஸ்ட்டுகளை மட்டுமே வைத்து 'அவனும் நானும்' குறும்படத்தை இயக்கியுள்ளார் ஏ.எல்.விஜய். இந்த ஐடியா அரதப் பழசாகவும், ஊகிக்கும் வகையிலும் உள்ளது. கல்லூரி மாணவர்களே ஸ்மார்ட்டாக இப்படி குறும்படம் எடுக்கும் எடுத்து திரும்பிப் பார்க்க வைக்கும் ட்ரெண்டிங் காலத்தில், இக்கருவைக் கொஞ்சம் தாமதமாக எடுத்திருப்பதும், 'தியா' படத்தை நினைவூட்டுவதுமாக கதைக்களம் இருப்பதும் பலவீனங்கள்.
எல்லா ஆண்களையும் தப்பாக நினைக்காதீர்கள் என்று மெசேஜ் சொன்ன விதத்தில் மட்டும் ஏ.எல்.விஜய்யின் அக்கறை தெரிகிறது. ஆனால், படமாக்கப்பட்ட விதத்தில் எந்தப் புதுமையும் இல்லாததால் ஏமாற்றமே மிஞ்சியது.
இதில் தேவையில்லாத ஆணி வெங்கட் பிரபு இயக்கிய 'லோகம்'தான். அனிமேஷன் கேமை மையமாகக் கொண்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றுள்ளார். அதில் ரொம்பவே ஏமாற்றியுள்ளார். வருண், சங்கீதா, சாக்ஷி அகர்வால் என்று நடிகர்கள் பங்களிப்பு இருந்தும், சுவாரஸ்யமில்லாத திரைக்கதையால் குறும்படமாக அது எடுபடவில்லை. கேம் மூலம் காதல் என்று அப்டேட் வெர்ஷனைக் காட்டிய வெங்கட் பிரபு, கேன்சர் என்ற நோய்க்கூறை வைத்து பழைய படங்களின் காலத்துக்கே அழைத்துச் செல்கிறார். அது சோர்வைத் தருகிறது. இந்தக் குறும்படம் எதற்கு என்று ரசிகர்களை யோசிக்க வைத்த அவரின் துணிச்சலுக்கு மட்டும்!? பாராட்டுகள்.
நான்கு குறும்படங்களில் ஏமாற்றாத ஒரு குறும்படம் 'ஆடல்- பாடல்'. 'சூதுகவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய நலன் குமாரசாமியின் படைப்பு.
தன் கணவர் விஜய் சேதுபதிக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதைக் கண்டறிகிறார் அதிதி பாலன். ஒரு போன் கால் மூலம் கணவரின் தவறை அவரிடமே நிரூபிக்கிறார். கையும் போனுமாக சிக்கிய விஜய் சேதுபதி செய்வதறியாது தவித்துப் போகிறார். நானும் அதே மாதிரி ஒரு தவறைப் பண்ணியிருக்கிறேன் என்று கணவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார். அந்த அதிர்ச்சிக்குப் பிறகு விஜய் சேதுபதியும், அதிதி பாலனும் என்ன ஆகிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் நலன் குமாரசாமி.
ஹெட்வின் லூஸ் விஸ்வநாத் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியுள்ளார். ஒரே வீட்டில் நடக்கும் காட்சிகள் என்று அலுப்பூட்டாத அளவுக்கு கேமராவில் மேஜிக் செய்துள்ளார் சண்முக சுந்தரம். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் கச்சிதம்.
விஜய் சேதுபதியும், அதிதி பாலனும் போட்டி போட்டு நடித்துள்ளனர். இயலாமை, கோபம், ஆதங்கம், குழப்பம் என்ற கலவையான உணர்வுகளைத் தனக்கே உரிய பாணியில் விஜய் சேதுபதி வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார். அவரைச் சமாளிக்கும் புத்திசாலிப் பெண்ணாக அதிதி அழகாக ஸ்கோர் செய்கிறார்.
ஒரு ஆணின் சராசரி மனநிலை என்ன, ஆணின் பார்வையும், பெண்ணின் பார்வையும் எங்கு எதில் மாறுபடுகிறது என்பதை நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி மிகவும் உறுதியாகச் சொல்லி இருக்கிறார் நலன் குமாரசாமி. ஒரு முழுப் படத்துக்கான அடர்த்தியை, உழைப்பைக் குறும்படத்தில் கடத்தி இருக்கும் நலன் குமாரசாமியின் தொழில் பக்திக்குப் பாராட்டுகள். இந்த ஒரு குறும்படம் மட்டுமே தனித்து கம்பீரமாக நிற்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
38 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago