ஓடிடி வெளியீடு; அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கருத்துக்கு 'மாநாடு' தயாரிப்பாளர் அதிருப்தி

ஓடிடி வெளியீடு தொடர்பான அமைச்சர் கடம்பூர் ராஜுவின் கருத்துக்கு 'மாநாடு' தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பதிவில் அதிருப்தி கொடுத்துள்ளார்.

நாளை (பிப்ரவரி 12) திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்ட படம் 'ஏலே'. ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெளியீடு தொடர்பான பேச்சுவார்த்தையில், 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி என்ற கடிதம் கொடுத்தால் மட்டுமே திரையரங்குகளை ஒதுக்குவோம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

இது தொடர்பான மோதலில், இறுதியாக 'ஏலே' திரைப்படம் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. ஓடிடி வெளியீடு தொடர்பான சர்ச்சை குறித்த கேள்விக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, "திரையரங்குகளில் படம் ஓடும்போது ஓடிடியில் படத்தை வெளியிடமாட்டோம் என்று கடிதம் கொடுத்தால்தான் திரைப்படங்களை வெளியிடுவோம் என்று கூறும் திரையரங்கு உரிமையாளர்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு" என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில் 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒரு துறை சார்ந்த அமைச்சர் அத்துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்த கருத்துகளைப் பதிவிடும்பொழுது, ஒரு சாரரை மட்டும் ஆதரித்துப் பேசுவது ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல். இனியாவது தயாரிப்பாளர் பிரச்சினைகளையும் அறிந்து, பின் பேசுங்கள் ஐயா".

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE