ஆஸ்கர் 2021: ஏமாற்றம் தந்த ’ஜல்லிக்கட்டு’; குறும்பட இறுதிப் பட்டியலில் ’பிட்டூ’

By செய்திப்பிரிவு

இந்தியாவின் அதிகாரபூர்வ ஆஸ்கர் பரிந்துரையான 'ஜல்லிக்கட்டு' திரைப்படம் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதே நேரம் குறும்படப் பிரிவில் இந்தியாவின் 'பிட்டூ' இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த மலையாளத் திரைப்படம் 'ஜல்லிக்கட்டு'. ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் இது. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சகர்களிடமும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2019 செப்டம்பர் மாதம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கெடுத்த 'ஜல்லிக்கட்டு' அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், அந்த ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் படத்தின் இயக்குநர் பெல்லிச்சேரி சிறந்த இயக்குநர் விருதை வென்றார்.

சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் போட்டியிட 'ஜல்லிக்கட்டு' தேர்வாகியிருந்தது. அயல்நாட்டு விமர்சகர்கள் சிலர் 'ஜல்லிக்கட்டு' படத்தை வெகுவாகப் பாராட்டி விமர்சனங்கள் எழுதியிருந்தனர். இதனால் இம்முறை இறுதிப் பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பினர்.

ஆனால், ஆஸ்கர் பரிந்துரைக்கான இறுதிப் பட்டியலை அகாடமி புதன்கிழமை அன்று வெளியிட்டது. இதில் 'ஜல்லிக்கட்டு' இடம்பெறவில்லை. இந்தப் பிரிவில் மொத்தம் 93 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தியாவைச் சேர்ந்த எந்தத் திரைப்படமும் ஆஸ்கர் விருதை வென்றதில்லை. கடைசியாக இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற இந்தியத் திரைப்படம் 'லகான்' (2001ஆம் ஆண்டு).

இன்னொரு பக்கம் குறும்படப் பிரிவில் இந்தியாவின் பரிந்துரையான 'பிட்டூ' இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கரிஷ்மா தேவ் துபே என்பவரின் முதல் குறும்படமான இது ஏற்கெனவே 18 திரைப்பட விழாக்களில் பங்கெடுத்துள்ளது. ஏக்தா கபூர், குனீத் மோங்கா, தாஹிரா காஷ்யப் ஆகியோர் இதனைத் தயாரித்துள்ளனர். பல இந்தியப் பிரபலங்கள் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏப்ரல் 25ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE