ஓடிடி Vs திரையரங்க உரிமையாளர்கள்: பட வெளியீட்டில் நிலவும் சிக்கல் - எஸ்.ஆர்.பிரபு காட்டம்

By செய்திப்பிரிவு

ஓடிடி தளங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருவருக்கும் இடையே நிலவும் சிக்கல்கள் தொடர்பாக எஸ்.ஆர்.பிரபு காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் என்பது படங்களின் வியாபாரத்தில் முற்றிலுமாக மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. கரோனா ஊரடங்கு சமயத்தில் மக்கள் மத்தியில் ஓடிடி தளங்கள் மிகவும் பிரபலமாகத் தொடங்கின. இதனால் பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகின. இதற்குப் பெரும் தொகையும் கிடைத்ததால் தயாரிப்பாளர்களும் உற்சாகமானார்கள்.

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு மீண்டும் சகஜநிலை திரும்பியுள்ளது. இந்தச் சமயத்தில் டிஜிட்டல் விற்பனைக்கு ஓடிடி தளங்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருவதால் தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், திரையரங்க உரிமையாளர்களும் டிஜிட்டல் விற்பனைக்கு நிபந்தனைகள் விதித்துள்ளதால் படங்கள் வெளியீட்டில் சிக்கல் நிலவுகிறது.

சிறு படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட எந்தவொரு ஓடிடி நிறுவனமும் முன்வருவதில்லை. மாறாகத் திரையரங்கில் வெளியிடுங்கள், அங்கு வெற்றியடையும் பட்சத்தில் படத்தை 14-வது நாளில் ஓடிடி வெளியீட்டுக்கு வாங்கிக் கொள்கிறோம் என்று ஓடிடி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால், திரையரங்க உரிமையாளர்களோ சிறு படங்களுக்கு 30 நாட்கள், பெரிய படங்களுக்கு 50 நாட்கள் கெடு விதித்துள்ளனர். அதற்குப் பிறகே ஓடிடி வெளியீட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

இந்தச் சிக்கலால் தயாரிப்பாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சங்கங்கள் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட பிறகுதான் முறையான வெளியீடு பற்றி முடிவெடுக்க முடியும். ஒட்டுமொத்தத் துறையின் செயல்பாட்டை ஒரே ஒரு அமைப்பு தீர்மானிக்க முடியாது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் விதத்தைப் பார்க்கும்போது எதிர்காலத்துக்கான சரியான பாதையை நிர்ணயிக்கும் கடமை சந்தையில் முன்னணி வகிப்பவர்களுக்கு இருக்கிறது. குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.

ஓடிடி நிறுவனங்கள், திரையரங்க வெளியீட்டுக்காக எடுக்கப்படும் ஒரு படத்தை வாங்குகின்றன அல்லது சொந்தமாகத் தயாரிக்கின்றன. இதுவரை யாரும் ஓடிடிக்காகவே படம் எடுத்து அதன் பிறகு அவர்களை அணுகியதில்லை. ஆனால், நேரடி ஓடிடி படத்தில் முதலீடு செய்யச் சொல்லிப் பல தயாரிப்பாளர்களைச் சம்மதிக்க வைக்கிறார்கள். அந்தப் படங்கள் எடுக்கப்பட்டபின் யாரும் அதை வாங்காமல் போகலாம்".

இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE