'மாஸ்டர்' வெளியீட்டில் எடுக்கப்பட்ட ரிஸ்க்: மனம் திறக்கும் தயாரிப்பாளர்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டின்போது எடுக்கப்பட்ட ரிஸ்க் குறித்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசினார்.

ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வசூல் சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது.

சுமார் 10 மாதங்கள் கழித்து இந்தப் படம் வெளியானதால், பல்வேறு வெளியீட்டுச் சிக்கல்களைச் சந்தித்தது 'மாஸ்டர்' படக்குழு. இறுதியாக சில ஏரியாக்களில் படத்தை விநியோகஸ்தர் இல்லாமல் நேரடியாகவே வெளியிட்டார்கள். இறுதியில் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டில் எடுக்கப்பட்ட ரிஸ்க் குறித்து மனம் திறந்துள்ளார் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

"எங்கள் முதலீட்டை வட்டியோடு திரும்பப் பெற்று விடுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். படத்தின் லைன் ப்ரொடியூசர்ஸ் எங்களுடன் சேர்ந்து இணை தயாரிப்பாளராக மாறினார்கள். அவர்கள் வந்த பிறகு சில விஷயங்களில் பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டோம். இணை தயாரிப்பாளர் லலித் வெளிநாடுகளில் விநியோகத்தைக் கையாண்டார். அவர் நல்ல அனுபவம் பெற்றவர். பேரம் பேசுவதில் திறமையானவர்.

ஆரம்பத்தில் வெளிநாடு உள்ளிட்ட அத்தனை பகுதிகளுக்கான உரிமங்களும் விற்றுப் போயின. ஆனால் தொற்றுக் காலம், ஊரடங்கு வந்ததால் விநியோகஸ்தர்கள் அவர்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டனர். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. லலித் அழுத்தத்துக்கு ஆளானார். கவலை வேண்டாம் என்று அவரிடம் சொன்னேன்.

தீபாவளி தாண்டியதும் விநியோகஸ்தர்கள் காத்திருக்க விரும்பவில்லை. அதிக அழுத்தம் தர ஆரம்பித்தனர். லலித், எனது ஆடிட்டர்கள், விநியோகஸ்தர்கள் என்னைச் சந்தித்தனர். ஆம், அப்போது நிலைமை சரியாக இல்லை. வட்டியுடன் தங்கள் பணத்தை விநியோகஸ்தர்கள் கேட்டனர். அவர்கள் பணத்தை நாங்கள் 6-9 மாதங்கள் வைத்திருந்ததால் யாராக இருந்தாலும் அப்படித்தான் கேட்டிருப்பார்கள். எனவேம் அதையும் பரிசீலிக்க வேண்டியிருந்தது. இரண்டு பக்கமும் வட்டி கட்டிக் கொண்டிருந்தோம். நானும், லலித்தும் முதலீடு செய்திருந்தோம். எங்கள் முதலீட்டின் வட்டியும் எங்களுக்குக் கிடைக்க வேண்டியிருந்தது. அப்படி ஒரு விவரிக்க இயலாத சிரமமான சூழல் அது.

அதனால் போட்ட ஒப்பந்தத்தை மொத்தமாக மாற்றினோம். அனைவருக்கும் லாபகரமாக இருக்கும்படி புது ஒப்பந்தத்தைப் போட்டேன். பெரிய ரிஸ்க் எடுத்தோம். படத்துக்கான மொத்தச் செலவு, வட்டியோடு என்ன என்பதைக் கணக்கிட்டோம். இதனால் படத்தின் பட்ஜெட் 20 சதவீதம் அதிகமானது. ஏப்ரல் வரை படத்தின் பட்ஜெட் திட்டமிட்ட அளவு இருந்தது. அதன்பின் சூழல் மாறியதும் எங்கள் லாப விகிதமும் குறைந்தது. எனது லாபத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுத்தேன். நான் சில சமரசங்கள் செய்துகொண்டேன்.

படத்தின் திரையரங்க வசூல் நன்றாக இருக்கிறது. ஆனால், வரியும் கட்ட வேண்டும். மொத்த வசூல்தான் வெளியே சொல்லப்படுகிறது. பல இடங்களில் நாங்களே திரைப்படத்தை நேரடியாக வெளியிட்டுள்ளோம். நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில கணக்குகள் முடிக்கப்படக் காத்திருக்கிறோம். இன்னும் ஒரு வாரத்தில் கூடுதல் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். எவ்வளவு என்பது வரும்போது தெரியும்.

50 சதவீதம் மட்டும் என்பதால் வசூல் குறையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதைச் சரியாகக் கையாண்டோம். மேலும் மற்ற உரிமங்களும் எங்களிடம் விற்கப்படாமல் உள்ளன. அதன் மூலமும் வருவாய் கிடைக்கும்.

50 சதவீத இருக்கைகளை மட்டும் வைத்துப் பார்த்தாலும் 'மாஸ்டர்' பெரிய வெற்றிப் படமே. பட்ஜெட் 20 சதவீதம் அதிகமானதால் எவ்வளவு லாபம் கடைசியாக வரும் என்பதை இப்போது கணக்கிட முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு தயாரிப்பாளராக நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.

இன்னும் சில வாரங்களில் வசூல் விவரங்களைத் தாக்கல் செய்து சரியான வசூல் என்ன என்பதை அறிவிப்போம். ஏனென்றால் அது சிறிய, நடுத்தர பட்ஜெட் தயாரிப்பாளர்கள், அவர்கள் திரைப்படங்களைத் திரையரங்கில் வெளியிட நம்பிக்கை தருவதாக இருக்கும். அதற்காகவாவது எங்களது இறுதி வசூல் நிலவரத்தை அறிவிப்போம். மொத்த வசூலாகச் சொல்லப்படும் அளவு சரியாக இருக்க வேண்டும். நிகர லாபம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் ஒரு தயாரிப்பாளராக எனக்கு ஆர்வம் இருக்கிறது".

இவ்வாறு தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE