நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது முக்கியம்: புதுமுக இயக்குநர்களுக்கு கெளதம் மேனன் அறிவுரை

By செய்திப்பிரிவு

நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது முக்கியம் என்று புதுமுக இயக்குநர்களுக்கு கெளதம் மேனன் அறிவுரை கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கெளதம் மேனன். தற்போது வருண் நடிப்பில் உருவாகி வரும் 'ஜோஷ்வா' படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

2001-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கெளதம் மேனன் இயக்கத்தில் 'மின்னலே' படம் வெளியானது. ஆகையால், இந்த ஆண்டுடன் திரையுலகில் 20 ஆண்டுகளைக் கடந்துள்ளார் கௌதம் மேனன்.

இதனை முன்னிட்டு நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு ஏற்பட்ட வியாபார சிக்கல்கள் குறித்தும் பேசியுள்ளார் கெளதம் மேனன். அந்தப் பேட்டியில் "வெற்றி பெற்ற இயக்குநர் ஒருவரையே சினிமாவின் வியாபாரம் பாதிக்கிறது என்றால் அப்போது துறை எந்த நிலையில் இருக்கிறது” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்:

"நான் என் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறேன். மற்ற யாரும் பேசுவதில்லை. அதுதான் வித்தியாசம். புதிதாக வருபவர்கள் கற்றுக் கொள்ள நிறையப் பாடங்கள் உள்ளன. உங்களைப் பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். படத்தின் வசூலுக்கு உங்களைக் காரணம் காட்டாத தயாரிப்பாளர்களோடு பணியாற்றுங்கள், ஒரு ஒப்பந்தத்தை வைத்து உங்களை எல்லாவற்றுக்கும் பொறுப்பாக்க விடாதீர்கள். ஏனென்றால் அப்படித்தான் தான் தொடர்ந்து பணம் தேவைப்படும் சுழலில் சிக்குவோம்.

உங்களிடம் அற்புதமான கதை இருந்தால், அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று தெரிந்தால், சினிமா உலகம் என்பது மிக அற்புதமான இடம். ஆனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதும் முக்கியம். என்னால் இதில் தனியாகப் பாடமே நடத்த முடியும்.

நான் ஒரு உதாரணம் தருகிறேன். சந்தையிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும்போது, படத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு பெரிய இசை நிறுவனம் உங்கள் படத்தின் இசை உரிமத்துக்கு ஒரு கோடி தரத் தயாராக இருந்தால் நீங்கள் யோசிக்க மாட்டீர்கள். ஏனென்றால் படத்தை முடிக்க உங்களுக்கு அந்தப் பணம் தேவையாக இருக்கும். ஆனால் பாடல்களின் உரிமையை நீங்களே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற திட்டம் உங்களுக்கு இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? உங்களால் அந்தப் பாடலை வைத்து யூடியூப் உள்ளிட்ட மற்ற தளங்களின் மூலம் பணம் பெற, லாபம் சம்பாதிக்க முடியும். அறிவுசார் சொத்துரிமை பற்றித் தெரிந்து கொள்வது முக்கியம்.

இதனால் தான் 'அச்சம் என்பது மடமையடா', 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' ஆகிய படங்களின் பாடல்களை எனது ஒன்றாக யூடியூப் சேனலில் வெளியிட்டேன். அது காலப்போக்கில் லாபகரமானதாக இருக்கிறது.

ஒன்றாக யூடியூப் சேனலில் இருக்கும் இசையின் மூலம் எங்களுக்குப் பணம் வருகிறது என்றாலும் அதை நாங்கள் ஒரு வியாபாரமாகப் பார்க்கவில்லை. எங்களது சொந்த குறும்படங்கள், காணொலிகளை வெளியிடுவதோடு மற்ற சுயாதீன படைப்புகளையும் வெளியிடுவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். ஓடிடிக்கு செல்லாமல் நேரடியாக எங்கள் சேனலில் முழு நீள திரைப்படத்தை வெளியிட எங்களைச் சிலர் அணுகியுள்ளனர்.

கதாசிரியர்கள் குழு ஒன்றையும் அமைக்கவிருக்கிறோம். எங்களுடன் இணைந்து பணியாற்ற எழுத்தாளர்களைத்தேடி வருகிறோம். யார் வேண்டுமானாலும், நிஜமாகவே யார் வேண்டுமானாலும் ஒரு திரைக்கதையோடு எங்களைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற முடியுமா என்பதைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்"

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE