உடல் எடையைக் குறைக்க கிட்டத்தட்ட செத்துப் பிழைத்தேன்: அசோக் செல்வன்

By செய்திப்பிரிவு

உடல் எடையைக் குறைக்கும் போது கிட்டத்தட்டச் செத்துப் பிழைத்தேன் என்று அசோக் செல்வன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

'ஓ மை கடவுளே' படத்தைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் புதிய படமொன்று தொடங்கப்பட்டது. பிரபல இயக்குநர் ஐவி சசியின் மகன் அனி சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாசர், நித்யா மேனன், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் இந்தப் படம் தயாராகி வந்தது.

தெலுங்கில் 'நின்னிலா நின்னிலா' எனவும், தமிழில் 'தீனி' என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இணையத்தில் 'தீனி' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதில் சமையல் கலை நிபுணராக நடித்துள்ளார் அசோக் செல்வன். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை அதிகரித்து பின்பு குறைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அசோக் செல்வன் கூறியிருப்பதாவது:

"ஹே, இது தான் தேவ். என் இதயத்துக்கு நெருக்கமான படம். அதிக அன்பும், முயற்சியும் போட்டு எடுத்த படம். கொஞ்சம் ப்ராஸ்தடிக் ஒப்பனை பயன்படுத்தப்பட்டிருந்தாலும், 103 கிலோ எடையை அடைய இந்தப் படத்துக்காகக் கூடுதலாக 25 கிலோ எடை கூடினேன். குறைக்க முயலும்போது கிட்டத்தட்டச் செத்துப் பிழைத்தேன்.

இது மிகவும் விசேஷமான படம். உங்கள் அத்தனை பேரின் அன்பும், ஆதரவும் இதற்குத் தேவை. எல்லாவற்றையும் தாண்டி இது என் உயிர் நண்பன் அனி ஐவி சசியின் இயக்கத்தில் முதல் படம். நித்யா மேனன், ரித்து வர்மா, திவாகர் மணி, நாசர் அவர்கள், ராஜேஷ் முருகேசன் உள்ளிட்ட சிறந்த திறமையாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது"

இவ்வாறு அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE