தமிழ் சினிமா

மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித்?

செய்திப்பிரிவு

'வலிமை' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜித்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளிநாட்டில் ஒரு வாரம் மட்டும் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டு வருகிறது படக்குழு.

இதில் ஹியூமா குரோஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை கோகுலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது மீண்டும் போனி கபூர் தயாரிப்பிலேயே நடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் அஜித். இந்த கரோனா அச்சுறுத்தல் காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

எப்போதுமே ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் மிகவும் இணக்கமாகிவிட்டால், தொடர்ச்சியாகத் தேதிகள் கொடுப்பார் அஜித். சத்யஜோதி நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' என இரண்டு படங்கள் நடித்துக் கொடுத்தார். மீண்டும் மூன்றாவது முறையாக அஜித்திடம் தேதிகள் கேட்டுள்ளனர்.

தற்போது ஒரு தயாரிப்பாளருக்கு அஜித் தொடர்ச்சியாக 3-வது படம் கொடுப்பது இதுவே முதல் முறை. 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களைத் தொடர்ந்து போனி கபூருக்கு அடுத்த படத்தையும் கொடுத்துள்ளார் அஜித். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

SCROLL FOR NEXT