த்ரில்லர் படங்கள்தான் எனக்கான களம்: அருள்நிதி சிறப்பு நேர்காணல்

By கார்த்திக் கிருஷ்ணா

வித்தியாசமான கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்பில் முதன்மையானவர் அருள்நிதி. எப்போதுமே ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் கதைகளையும் தேர்வு செய்வார். தற்போது கிராமத்துப் பின்னணியில் ஜீவாவுடன் 'களத்தில் சந்திப்போம்' படத்தில் நடித்துள்ளார் அருள்நிதி. இந்தப் படம் தொடர்பாக அருள்நிதியிடம் பேசியதிலிருந்து...

10 வருடங்களில் வெறும் 11 படங்கள். ஏன் இந்தத் திட்டம்?

நான் எல்லா படங்களையுமே நேரம் எடுத்துதான் நடிக்கிறேன். தொடர்ந்து த்ரில்லர் படங்களாகவும் அமைந்துள்ளன. நிறையக் கதைகள் கேட்கிறேன். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடிக்கும்போது அதற்கான கால நேரம் ஆகிறது. எனவே இப்படியான எந்தத் திட்டமும் இல்லை. கதைத் தேர்வில் கோட்டை விட்டால் நாம் ஒன்றுமே கிடையாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இதுவரை அதுதான் என்னைக் காப்பாற்றி வருகிறது. அதில் எச்சரிக்கையாக இருப்பதால்தான் நேரம் எடுக்கிறது. அடுத்த ஆறு மாதங்களில் அடுத்தடுத்து சில படங்கள் வரும். 3 படங்கள் வரிசையாக உள்ளன.

'களத்தில் சந்திப்போம்' கதாபாத்திரம் குறித்து?

ஜீவாவும், சவுத்ரி சாரும் இப்படி ஒரு கதை இருக்கிறது, கேளுங்கள் என்றார்கள். சவுத்ரி சார் என்றாலே கண்டிப்பாக குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும். மேலும், அவர் கதை கேட்டு ஒப்புக்கொண்ட பிறகு நாம் அதைக் கேட்டு ஏதாவது சொல்ல வேண்டுமா என்றும் யோசித்தேன். ஏனென்றால் அவர் குடும்பம் சார்ந்த கதை கொண்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர்.

இயக்குநர் ராஜசேகர் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். வணிகரீதியான படமாக இருந்தாலும் எல்லா விஷயங்களும் கதைக்குள் கச்சிதமாக வைக்கப்பட்டிருந்தது. நான் இதற்கு முன் முறைத்து, புருவத்தைத் தூக்கி என்று தீவிரமான கதைகளிலேயே நடித்திருக்கிறேன். அதனால் மற்றவர்களும் நான் மிகவும் தீவிரமான நபர் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். என்னிடம் வந்து பேசிய பிறகுதான் நான் அப்படி இல்லை என்று தெரியும்.

படப்பிடிப்பு ஆரம்பித்து முதல் ஒரு வாரம் சற்று யோசனையாக இருந்தது. ஓஹோ இந்த மாதிரியான படத்தின் படப்பிடிப்பு இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்தேன். பின் ஜீவா சக நடிகராக, தயாரிப்பாளராக எனக்கு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுத்தார்.

'தகராறு' படத்துக்குப் பிறகு இதுதான் நீங்கள் நடிக்கும் ஜனரஞ்சகமான திரைப்படம். நடுவில் வேறு யாரும் இப்படியான கதைகளை உங்களிடம் கொண்டு வரவே இல்லையா?

'மௌனகுரு' முடித்த பின் ‘தகராறு’ படத்தில் நடித்தேன். ஆனால் த்ரில்லர் கதைகள் சொல்லப்பட்ட அளவுக்கு என்னிடம் ஜனரஞ்சகமான கதைகளை யாரும் சொல்லவில்லை. த்ரில்லர் வகையில் 10 கதைகள் கேட்கிறோம் என்றால் அதில் ஒன்று தேர்வு செய்யும் சுதந்திரம் இருக்கிறது. ஒன்று இல்லையென்றால் இன்னொன்று. ஆனால், ஜனரஞ்சகக் கதைகள் ஒன்றிரண்டு மட்டுமே வரும்போது அதில் எதைத் தேர்வு செய்வது என்கிற தயக்கம் இருந்தது.

த்ரில்லர் படங்கள்தான் எனக்கான களம். மக்கள் ஒருவரை, ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஏற்றுக்கொண்டிருக்கும்போது அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். வேறொருவர் வந்து மொத்தமாக எனக்கான இமேஜை மாற்றும்போது ரசிகர்களும் புதுவகையை ஏற்றுக் கொள்வார்கள். இனி இரண்டு த்ரில்லர் படங்களுக்குப் பிறகு ஒரு படம் இப்படி ஜனரஞ்சகமாக இருக்கலாமா என்று யோசித்து வருகிறேன்.

இரண்டு நாயகர்கள் இருந்தால் நண்பர்களாக இருப்பார்கள் அல்லது நாயகன் - வில்லனாக இருப்பார்கள். இந்தப் படத்தில் இரண்டு நாயகர்கள் நண்பர்கள். அப்படி வழக்கமான அமைப்பில் படத்தில் என்ன புதிதாக இருக்கும்?

நட்பு, கிராமம், ஜனரஞ்சகமான கதை என்றாலே கண்டிப்பாக சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறத்தான் செய்யும். எனக்கு ஆபத்து வந்தால் அவர் காப்பாற்றுவது, அல்லது அவருக்கு ஆபத்து வந்தால் நான் காப்பாற்றுவது என இருக்கத்தான் செய்யும். அது எடுக்கப்படும் விதம் புதிதாக இருக்கிறதா என்பதே முக்கியம். அதற்கான காரணங்கள் புதிதாக இருக்க வேண்டும். அது இந்தப் படத்தில் புதிதாக, சந்தோஷமாக, நகைச்சுவையாக இருக்கும்.

இரண்டு கதாபாத்திரங்களில் எது வேண்டுமானாலும் நடிக்கலாம் என்கிற சலுகை இருந்ததா?

இல்லை, என்னை இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றுதான் அணுகினார்கள். கதை சொல்லும்போதே எனக்கான கதாபாத்திரம் என் இயல்புக்குச் சரியாக இருப்பதாகவே தோன்றியது. அவர் எதுவாக இருந்தாலும் எளிமையாக அணுகுவார். நான் நண்பர்களுக்கு ஒன்று என்றால் கோபப்படுவேன் என்பது போலவே பாத்திரப் படைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் உங்கள் முதல் மல்டி ஸ்டாரர் இல்லையா?

பெரிய ஹீரோ ஒருவருடன் இணைந்து நடிப்பது இது முதல் முறை என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி என் படங்கள் எல்லாமே மல்டி ஸ்டாரர்தான். 'வம்சம்' படத்தின் முதல் பாதியில் சுனைனாதான் முதன்மையாகத் தெரிவார். 'மௌன குரு'வில் எல்லாக் கதாபாத்திரங்களும். ஜான் விஜய்யும், உமா ரியாஸும்தான் அதில் முதன்மை. 'தகராறு' கதையில் நான்கு பேருமே முக்கியம். 'டிமான்ட்டி காலனி'யில் கடைசியாக செத்துப் போவேன் அவ்வளவே.

அப்படி ஏற்கெனவே வெற்றிப் படங்கள் கொடுத்த ஒருவரோடு சேர்ந்து அவரது தயாரிப்பில் நடிக்கும்போது சந்தேகங்கள் இருந்ததா?

இருந்தாலும் அதை நான் நேரடியாகக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டேன். எனக்கு எந்த அசவுகரியமும், சந்தேகமும் இல்லாதது போலப் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்குள் பரிச்சயம் முன்னரே இருந்தது. நான்தான் அங்கு புதிது. என்றாலும் அப்படி உணரவிடாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆக்‌ஷன் படங்கள் செய்தால்தான் பெரிய நாயகனாக ஆக முடியும் என்கிற நம்பிக்கை தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இன்னமும் அப்படி ஒரு வழக்கம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

ஆக்‌ஷன் கண்டிப்பாக முக்கியம்தான். ஆனால் அது சரியாகப் பொருந்தி வர வேண்டும். அப்படி இருந்தால் கண்டிப்பாக அது அந்த நடிகரை மக்களிடம் கொண்டு சேர்க்கும். இதற்கு முன் வெற்றி பெற்ற நடிகர்களுக்கு அப்படித்தான் அமைந்திருக்கிறது இல்லையா. தேவையில்லாத இடங்களில் ஆக்‌ஷன் இருக்கும்போது அது மக்களிடம் சென்று சேராமலும் இருந்திருக்கிறது. அதேசமயம் குடும்பப் பாங்கான, ஜனரஞ்சகப் படங்களும் முக்கியம்தான்.

சீனு ராமசாமி, கரு.பழனியப்பன் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கும் படங்களின் நிலை என்ன?

கரு.பழனியப்பன் படம் கண்டிப்பாக நடக்கும். படம் குறித்து நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். சீனு ராமசாமியின் படம் பேச்சுவார்த்தை அளவில் மட்டுமே இருந்தது. அவருக்கு அடுத்தடுத்த படங்கள் இருந்ததால் தாமதமாகி ஆரம்பிக்கப்படவில்லை.

தமிழ்த் திரைத்துறையில் ஒரு இணை வெற்றி பெற்றுவிட்டால் அதே இணையை மீண்டும் வைத்து இன்னொரு படம் எடுப்பார்கள். நீங்கள் உங்கள் இயக்குநர்களுடன் இரண்டாவது திரைப்படத்தில் நடிக்கவே இல்லையே. ஏன்?

நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களுடனும் நான் இன்றுவரை நட்பாகவே இருந்து வருகிறேன். அவர்களது குடும்ப விசேஷங்களில் நானும், என் வீட்டு நிகழ்வுகளில் அவர்களும் கலந்துகொள்ளும் அளவுக்குப் பழக்கம் இருக்கிறது. பாண்டிராஜுடன் முதல் நாள் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இன்றும் இருக்கிறேன். அவர் இயக்கத்தில் இன்று நான் நடிப்பது எனக்கும் சாதகம்தான். ஆனால், அது முடியாது. ஏனென்றால் இப்போது அவரது படத்துக்கான பட்ஜெட், அளவு எல்லாம் அதிகமாகிவிட்டது. அது என்னைத் தாங்காது.

அதேபோலத்தான் அஜய் ஞானமுத்துவும். அவரும் இப்போது 'கோப்ரா' என்று பெரிய பட்ஜெட் பக்கம் சென்றுவிட்டார். ஒன்று நான் அவர்கள் அளவுக்கு வளர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் அடுத்து இயக்கும் படத்தில் மூன்று பேரில் ஒருவனாக என்னை நடிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும். துறையில் மீண்டும் அதே இணை என்று கேட்பார்கள்தான். ஆனால், அது இன்னும் சரியாக அமையவில்லை.

வருடத்துக்கு ஒரு படம் என்கிற உங்கள் வழக்கம் இந்த வருடம் உடைந்துவிட்டதே?

நான் உடைக்கவில்லை, கரோனா உடைத்துவிட்டது. கரோனா வரவில்லை என்றால் வருடத்துக்கு ஒரு படம்தான் வந்திருக்கும். இப்போது எல்லாம் சேர்ந்துகொண்டுவிட்டது. அடுத்து 'டைரி', எருமசாணி விஜய் இயக்கத்தில் ஒரு படம் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. அதன் பின் பிஜி முத்தையா தயாரிப்பில் அரவிந்த் என்கிற புதுமுக இயக்குநரோடு ஒரு படத்தில் நடிக்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE