சிலம்பரசன் பிறந்த நாள் ஸ்பெஷல்: சரிவுகளால் வீழ்ந்துவிடாத வித்தகன்  

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமா கதாநாயகர்களில் நட்சத்திர நடிகராக இருந்துகொண்டே. திரைக்கதை-வசனம் எழுதுதல், பாடல்களை எழுதுதல், பின்னணி பாடுதல், இசையமைத்தல், மற்ற நடிகர்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தல் என்று பல துறைகளில் தமது திறமையை நிரூபித்திருப்பவர்கள் வெகு சிலரே. அந்த அரிதான சிலரில் ஒருவரான டி.ஆர்.சிலம்பரசன் இன்று (பிப்ரவரி 3) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தந்தையைப் போல் பிள்ளை

சிம்பு என்றும் எஸ்.டி.ஆர் என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிலம்பரசன் நடிப்பு, இயக்கம், கதை-திரைக்கதை-வசனம், பாடல்கள் எழுதுதல், பாடல்களைப் பாடுதல், இசையமைப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எனப் பல துறைகளில் சாதித்து அஷ்டாவதானி என்று புகழப்படும் டி.ராஜேந்தரின் மகன். அவருடைய அன்னையான உஷாவும் சில படங்களில் நடித்தவர் என்கிற வகையில் திரைத் துறையைச் சேர்ந்தவர். சிம்புவுக்குத் திரைப்படங்களுடனான பந்தம் பிறப்பிலிருந்து தொடங்கிவிட்டது.

டி.ஆரின் 'உறவைக் காத்த கிளி' திரைப்படத்தில் இரண்டு வயதாக இருந்த சிம்பு நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு 12க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 'எங்க வீட்டு வேலன்', 'ஒரு வசந்த கீதம்' உள்ளிட்ட படங்களில் பதின்பருவச் சிறுவனாகவே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார்.

நட்சத்திர வானில் இளம் நாயகன்

2002 தீபாவளிக்கு வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் சிம்பு கதாநாயகனாகப் பதவி உயர்வு பெற்றார். ஏ.ஆர்.முருகதாஸ்-விஜயகாந்தின் 'ரமணா', ஏ.வெங்கடேஷ்-விஜய்யின் 'பகவதி', கே.எஸ்.ரவிகுமார்-அஜித்தின் 'வில்லன்' எனப் பெரிய படங்களுடன் டி.ஆர்.-சிம்புவின் 'காதல் அழிவதில்லை' வெளியானது. படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் நடனம், துடிப்பு, வேகம், வசன உச்சரிப்பில் தனி ஸ்டைல் என சிம்புவின் திறமைகள் கவனம் ஈர்த்தன.

அடுத்ததாக ஏ.வெங்கடேஷ் இயக்கிய 'தம்' படத்தில் நாயகனாக நடித்தார் சிம்பு. இந்தப் படம் வணிகரீதியாக வெற்றிபெற்று சிம்புவை ஒரு ஆக்‌ஷன் நாயகனாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அந்த வெற்றி கொடுத்த தெம்பில் மீண்டும் அதே இயக்குநர்-நடிகர் கூட்டணி இணைந்து அளித்த 'குத்து' படமும் வெற்றி பெற்றது.

'சாமி' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஹரி தன்னுடைய 'கோவில்' படத்துக்கு சிம்புவையே நாயகனாகத் தேர்ந்தெடுத்தார். அந்த அழகான கிராமத்துக் காதல் கதையில் அமைதியும் மென்மையும் நிரம்பிய கதாபாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்தினார் சிம்பு.

வியக்கவைத்த பரிணாமம்

நாயகனாக ஐந்து படங்களில் மட்டுமே நடித்திருந்த நிலையில் கதை-திரைக்கதை இயக்கம் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு 'மன்மதன்' படத்தில் நடித்தார். இவ்வளவு சீக்கிரம் இயக்குநருக்கு இணையான பணியைக் கையிலெடுப்பதைப் பலரும் கேலியாகவோ அவநம்பிக்கையுடனோ பார்த்தார்கள். ஆனால், 2004 தீபாவளிக்கு அஜித்தின் 'அட்டகாசம்' படத்துடன் வெளியான 'மன்மதன்' காதலை மையப்படுத்திய பரபரப்பான த்ரில்லராக அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் அனைவரையும் அதிசயிக்க வைத்தது.

ஏ.ஜே.முருகன் என்பவர் இயக்கிய படமென்றாலும் சிம்புவின் திரைக்கதையும் குறிப்பாக அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டுமே படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று பரவலாக உணரப்பட்டது. விமர்சகர்களும் இந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.

வெற்றிப் படம் என்பதைத் தாண்டி அதுவரை சிம்புவுக்கு இருந்த 'அதீத தன்னம்பிக்கை கொண்ட விடலைப் பையன்' என்னும் இமேஜை 'மன்மதன்' உடைத்தது. சிலம்பரசன் அசலான பன்முகத் திறமைசாலி என்று பரவலாக அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதைவிட முக்கியமாக 20களின் தொடக்க ஆண்டுகளிலேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட சாதிக்க வேண்டும், தனித்துத் தெரிய வேண்டும் என்கிற தீவிரமான உத்வேகம் அவர் மீது பலருக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது.

அடுத்ததாக வி.இஸட்.துரை இயக்கிய 'தொட்டி ஜெயா', கே.எஸ்.ரவிகுமாரின் 'சரவணா' படங்கள் ஓரளவு கவனம் ஈர்த்தன. 'மன்மதன்' அளித்த தெம்பில் 'வல்லவன்' படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார் சிம்பு, பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கத் தவறியது. அதற்குப் பிறகு சிம்பு இயக்க முயன்ற 'கெட்டவன்' உள்ளிட்ட படங்கள் பலவும் இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஒளிப்பதிவாளர் எஸ்.சரவணன் இயக்குநராக அறிமுகமான 'சிலம்பாட்டம்' படம் இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகளில் ஆபாசமான சித்தரிப்புகள் ஆகியவற்றுக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றது. சிம்பு ஒரு கிராமத்து இளைஞனாக நடித்த இந்தப் படத்தின் வெற்றி அவரை ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் கொண்டு சேர்ப்பதில் முக்கியமான பங்காற்றியது.

அனைவராலும் நேசிக்கப்பட்ட 'கார்த்திக்'

இதற்குப் பிறகு அப்போது விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்த கெளதம் மேனன் இயக்கத்தில் 2010 பிப்ரவரி 19 அன்று வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' (விடிவி) சிம்புவின் திரைவாழ்வில் என்றென்றைக்கும் மிக முக்கியமான படமாக அமைந்துவிட்டது. சிம்பு என்றாலே 'விடிவி' படத்தில் அவர் ஏற்று நடித்த கார்த்திக் கதாபாத்திரம் நினைவுக்கு வரும் அளவுக்கு அந்தப் படமும் அதில் அவருடைய நடிப்பும் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்தன.

அதுவரை சிம்புவுடன் அடையாளப்படுத்தப்படும் விஷயங்கள் பலவற்றைத் தவிர்த்து ஒரு நவீன நகர்ப்புற அழகனாக, மென்மையான காதலனாக சிம்புவைக் காட்டியிருந்தார் கெளதம் மேனன். அதன் மூலம் சிம்புவைப் பிடிக்காதவர்கள் கூட 'விடிவி' கார்த்திக்காக சிம்புவை ரசித்தார்கள். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரமும் அதில் சிம்பு தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்ட விதமும் அவருடைய நடிப்பும் அமைந்திருந்தன. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற 'விடிவி' தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றாக நிலைபெற்றது.

மாறுபட்ட கதாபாத்திரங்கள்

இந்த வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடித்த 'வானம்' படத்திலும் அவருடைய நடிப்புத் திறமை சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. அந்தப் படமும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இந்தியில் சல்மான் கான் நடித்து மாபெரும் வசூல் சாதனை புரிந்த 'தபாங்' படத்தின் தமிழ் மறு ஆக்கமான 'ஒஸ்தி'யை தரணி இயக்க அதில் சிம்பு நாயகனாக நடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவனின் அறிமுகப் படமான 'போடா போடி' நீண்ட தாமதத்துக்குப் பிறகு 2012இல் வெளியானது. அந்தப் படத்திலும் ஒரு நாயக நடிகராக சிம்புவின் மற்றொரு பரிமாணம் வெளிப்பட்டிருந்தது.

சர்ச்சைகளுக்கிடையே சில வெற்றிகள்

இதற்குப் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளில் சிம்பு வெறும் ஏழு படங்களில் மட்டுமே நாயகனாக நடித்திருக்கிறார். கெளரவத் தோற்றத்தில் சில படங்களில் தோன்றினார். அவர் நாயகனாக நடித்த படங்களில் கெளதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' தாமதமாக வந்தாலும் வணிகரீதியாக வெற்றி பெற்றது.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்னும் மாபெரும் தோல்விக்குப் பிறகு இந்திய அளவில் நன்மதிப்பைப் பெற்ற மூத்த இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோருடன் சேர்ந்து மல்ட்டி ஸ்டாரர் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் சிலம்பரசன். அந்தப் படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றானது.

இவை இரண்டைத் மற்ற ஐந்து படங்களும் வெற்றி பெறவும் இல்லை. மற்ற காரணங்களுக்காகவும் கவனம் ஈர்க்கவில்லை. இவற்றோடு படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் சிம்புவின் மீது பொதுவெளியில் புகாரளித்தது சிம்புவுக்கு அவப்பெயரை உண்டாக்கியது. உடல் எடை மிகவும் அதிகரித்து கேலிக்குள்ளானார்.

நம்பிக்கையளிக்கும் மாற்றங்கள்

சிம்புவும் அவருடைய ரசிகர்களும் நலன் விரும்பிகளும் மறக்க விரும்பும் இந்தக் காலகட்டத்தை அவர் இப்போது கடந்துவிட்டார் என்று அவருடைய அண்மைக் காலச் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கின்றன. சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடிப்பில் 2021 பொங்கலுக்கு வெளியான 'ஈஸ்வரன்' படம் வணிகரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. அதோடு சிம்பு உடல் எடையைக் குறைத்து மீண்டும் 20களில் இருக்கும் இளைஞனைப் போல் மாறியிருப்பது அவர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர் மீது சற்றேனும் அன்பு கொண்ட அனைவரையும் மகிழச் செய்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு', கெளதம் மேனன் இயக்கத்தில் இன்னொரு படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் 'பத்து தல' என சிம்புவின் வருங்காலத் திட்டங்கள் பெரும் நம்பிக்கை அளிக்கின்றன.

மறக்க முடியாத பாட்டுக் கலைஞர்

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகராக சிம்பு எப்போதும் வெற்றிகரமாக இயங்கியுள்ளார். நாயகனாக அறிமுகமாவதற்கு முன்பே 'காதல் வைரஸ் படத்தில் இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பைலா மோர்' என்னும் பாடலைப் பாடியவர் சிம்பு. கிட்டத்தட்ட தான் நடித்த அனைத்துப் படங்களிலும் ஒரு பாடலைப் பாடிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவற்றில் பெரும்பாலானவை வெற்றி பெற்றுள்ளன.

'என் ஆசை மைதிலியே', 'லூசுப் பெண்ணே', அவர் நடித்த படங்களில் மட்டுமல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்குப் பாடிய 'சைட் அடிப்போம் தம் அடிப்போம்' (பார்த்திபன் கனவு), 'காட்டுவழி' (மம்பட்டியன்) போன்ற பல பாடல்கள் சிம்பு குரலில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. நடிகராக ஐம்பது படங்களை நெருங்கிவரும் சிம்பு, பாடகராக நூறு பாடல்களைப் பாடிவிட்டார்.

'லூசுப் பெண்ணே' (வல்லவன்), 'லவ் பண்லாமா வேணாமா' (போடா போடி) உள்பட கிட்டத்தட்ட இருபது பாடல்களை எழுதிவிட்டார். பாடகராகவும் பாடலாசிரியராகவும் அவருடைய அசாத்திய திறமை திரைப் பாடல்களில் மட்டுமல்லாமல் 'Love Anthem', 'பெரியார் குத்து', 'Vote Song' போன்ற தனி ஆல்பங்களிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அன்பைப் பெற்றவர்

சிம்புவின் திரை மற்றும் திரைக்கு வெளியேயான ஆளுமைக்காக அவரை மிகவும் ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். அவருக்கு இருக்கும் வெறுப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால், அவர் திறமைசாலி என்பதை இவர்கள் யாராலும் மறுக்க முடியாது. ரசிகர்கள்-வெறுப்பாளர்கள் என்னும் இரு தரப்புகளுக்கு வெளியே பொதுவான பார்வையாளர்களில் பெரும்பாலானோருக்கு சிம்பு மீது ஒரு அன்பும் அக்கறையும் உண்டு. திறமை இருந்தும் அதற்கான உயரத்தை அடைய மறுக்கிறாரே அதற்கு அவருடைய சில செயல்களும் தவறான தேர்வுகளுமே காரணமாக இருக்கிறதே என்பதே சிம்புவின் மீதான பொதுப் பார்வையாளர்கள் பலரின் ஆதங்கம். இப்படி ஆதங்கப்பட வைக்கும் அன்பைப் பெற்ற திரைக் கலைஞர்கள் வெகு சிலரில் ஒருவராக இருக்கிறார் சிம்பு. அந்த அன்பை அவரும் உணர்ந்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பேட்டி ஒன்றில், “நான் பத்து ஆண்டுகளுக்கு படமே நடிக்காமல் அதற்குப் பிறகு ஒரு படத்தில் நடித்தால்கூட என் படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்று கூறியிருந்தார் சிம்பு. 'ஈஸ்வரன்' விஷயத்தில் அது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது.

இதையெல்லாம் தாண்டி சிம்புவின் வெற்றிக்குக் காரணம் அவருடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் என்று சொல்லலாம். அதலபாதாள வீழ்ச்சிகளிலிருந்து அசாதாரணமாக எழுந்து உயரே பறந்திருக்கிறார். தோல்விகளால் துவண்டதில்லை. புலம்பியதில்லை. தன் பிழைகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தியதில்லை. 'இனி அவர் கதை முடிந்தது' என்னும் ஆரூடங்களை ஒவ்வொரு முறையும் பொய்யாக்கியிருக்கிறார். இருபது ஆண்டுகளை நெருங்கும் அவருடைய கதாநாயகத் திரைப் பயணமே இதற்குச் சான்று பகிர்கிறது.

இரண்டு வயதில் திரைப் பயணத்தைத் தொடங்கி மிக இளம் வயதிலேயே நட்சத்திர அந்தஸ்தை எட்டிவிட்ட சிம்புவுக்கு இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வயதும் காலமும் இருக்கின்றன. அதற்கான வாய்ப்புகளும் உத்தேவகமும் உடல் ஆரோக்கியமும் அவருக்கு அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்