லோகேஷ் கனகராஜை மறைமுகமாக விமர்சிக்கிறாரா சிஎஸ் அமுதன்?

By செய்திப்பிரிவு

இயக்குநர் சிஎஸ் அமுதனின் சமீபத்திய ட்வீட்டில் 'மாஸ்டர்' திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை மறைமுகமாக விமர்சித்துள்ளதாகத் தெரிகிறது.

மிர்ச்சி சிவா நடிப்பில் தமிழின் முதல் ஸ்பூஃப் படமான 'தமிழ் பட'த்தின் இயக்குநர் சி.எஸ் அமுதன். இது பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சில வருடங்கள் கழித்து வெளியான இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது. நடுவில் அமுதன் இயக்கிய 'இரண்டாவது படம்' என்கிற படைப்பு இன்று வரை வெளியாகவில்லை.

சினிமா, அரசியல், விளையாட்டு, நாட்டு நடப்பு என பல விஷயங்கள் குறித்து அமுதன் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கே உரிய பாணியில் நக்கலாக ட்வீட் செய்து வருவது, அதில் கிண்டல், கேலி கலந்திருப்பது வழக்கம். சில சமயங்களில் சூசகமாகவும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அப்படி சமீபத்தில் ஒரு ட்வீட்டை அமுதன் பகிர்ந்திருந்தார். இதில், "சூப்பர் ஸ்டார்களை வைத்துப் படம் எடுக்கும், அதற்காக மிகப்பெரிய பட்ஜெட் கிடைக்கும் இளம் இயக்குநர்கள் அவர்களின் அரசியலைச் சரியாகத் தெரிந்து கொள்ளலாமே. முக்கியமாக பெண்ணியம் மற்றும் சாதியம் பற்றிய விஷயங்களை. திரைக்கதை மேற்பார்வைக்கு சிலரை வைத்தால் அதற்காகப் பெரிதாகச் செலவாகாது. நீங்கள் பலரது மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றீர்கள். கொஞ்சம் ட்ரை பண்ணு மாப்பி" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்வீட் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்யை வைத்து எடுத்து 'மாஸ்டர்' திரைப்படத்தைக் குறிப்பதாகவே இதைப் படித்தவர்கள் நினைக்கின்றனர். அதிலும் கடைசியில், 'மாஸ்டர்' திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடலில் வரும் வரியைப் போலவே 'ட்ரை பண்ணு மாப்பி' என்று அமுதன் குறிப்பிட்டிருப்பதால் இந்த ட்வீட் லோகேஷ் கனகராஜுக்கே என்று பலரும் அமுதனின் ட்வீட்டுக்குக் கீழே பதில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE