இந்தியில் ரீமேக்காகும் 'இரும்புத்திரை'- வில்லனாகும் விஷால்?

By செய்திப்பிரிவு

'இரும்புத்திரை' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் வில்லனாக விஷால் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'இரும்புத்திரை'. விஷால் தயாரித்த இந்தப் படம் 2018-ம் ஆண்டு மே 11-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த வரவேற்புக்குப் பிறகு பலரும் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டினார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது இந்தி ரீமேக்கில் முன்னணி நாயகன் ஒருவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தக் கையெழுத்து மட்டுமே பாக்கியுள்ளது.

இந்நிலையில், இதில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க விஷாலிடம் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் விஷால் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் சொல்லவில்லை. 'இரும்புத்திரை' படம் தமிழில் உருவானபோது, முதலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில்தான் விஷால் நடிக்க விரும்பினார். பின்பு நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஷால் நடிப்பில் 'சக்ரா' வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'எனிமி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE