தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் 2020-ம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்தியது: விஷ்ணு விஷால்

By செய்திப்பிரிவு

தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் 2020-ம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வெண்ணிலா கபடி குழு'. 2009-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி வெளியான இந்தப் படத்தில்தான் சுசீந்திரன், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

இன்றுடன் விஷ்ணு விஷால் அறிமுகமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது முன்னணி நாயகன், தயாரிப்பாளர் எனப் பணிபுரிந்து வருகிறார். 12 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு தனது ட்விட்டர் பதிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:

"நம்பமுடியாத 12 ஆண்டுகள்!

இப்பயணம் ஒரு மிகச்சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. என்னுடைய பயம், வலி அனைத்தையும் கடந்து ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் புதிதாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாதையில் என்னை ஆதரித்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் நன்றி.

வரும் ஆண்டுகளில் இன்னும் சாதிப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் என்னுடைய ரசிகர்கள், பார்வையாளர்களுக்கு என்னுடைய அன்பைப் பகிர்கிறேன்.

'காடன்', 'எஃப்.ஐ.ஆர்', 'மோகன் தாஸ்', 'இன்று நேற்று நாளை 2', இயக்குநர் செல்லாவுடன் தலைப்பிடப்படாத ஒரு படம் மற்றும் இயக்குநர் கோபிநாத் உடன் ஒரு படம் ஆகியவற்றில் பணிபுரிந்து வருகிறேன். இன்னும் சில அற்புதமான கதைகள் மற்றும் இயக்குநர்களுடன் பணிபுரியவுள்ளேன்.

கடந்த ஆண்டு நம் அனைவருக்குமே மிகவும் கடினமான ஒரு ஆண்டாக இருந்தது. தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், வாழ்க்கை என்பது தொடர்ந்து முன்னேறிச் செல்வதுதான். தொடர்ந்து அலையுடனோ அல்லது எதிர்த்தோ நீந்திக் கொண்டேயிருப்போம். உங்களை விரைவில் திரையரங்குகளில் சந்திக்கிறேன்"

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE