நடிகர் சோனுவுக்காக 2000 கிமீ சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் ரசிகர்

நடிகர் சோனு சூட்டுக்காக அவரது ரசிகர் ஒருவர் 2000 கிமீ சைக்கிள் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.

கரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி மாட்டிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும், அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்புத் தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.

இதோடு பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தார்.

இது போன்ற ஏராளமான உதவிகளை சோனு சூட் செய்து வருவதால் அவருக்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாராட்டு குவிந்து வருகிறது.

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலைத்தை சேர்ந்த சோனுவின் ரசிகரான நாராயண் வியாஸ் எனபவர் மக்களுக்கு சோனு செய்த உதவிகளுக்காக 2000 கிமீ சைக்கிள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது:

சோனு சூட்டுக்கு நான் எனது 2000 கிமீ சைக்கிள் பயணத்தை சமர்ப்பிக்கிறேன். அவர் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கவே இந்த பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறேன். ஊரடங்கில் நாம் வெளியே வர பயந்து கொண்டிருந்த தருணத்தில் அவர் துணிவுடன் வெளியே வந்து மக்களுக்கு உணவு கொடுத்து, அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்தார். இந்த காலத்தில் வெகு சிலரே அவரைப் போல இருக்கின்றனர். வாஷிம் நகரில் தொடங்கும் என் பயணம் ஹைதரபாத் வழியாக, பெங்களூர் சென்று, அங்கிருந்து மதுரையை அடைந்து இறுதியாக ராம் சேதுவில் முடிய உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சோனு சூட் கூறும்போது, ‘நாராயணுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நான் செய்த பணிகளுக்கு அங்கீகாரமாக 2000 கிமீ சைக்கிள் பயணத்தை மேற்கொள்வதாக அவர் அறிவித்த விஷயத்தை கேள்விப்பட்டு நான் நெகிழ்ந்து விட்ட்டேன்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE