என்ன மாதிரியான கதை இது; ஆர்வம் காட்டிய ரஜினி: 'ராணா' ரகசியம் குறித்து கே.எஸ்.ரவிகுமார் பகிர்வு

By செய்திப்பிரிவு

'ராணா' படத்தின் கதையைக் கேட்டு ரஜினி வியந்த விஷயத்தைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் கே.எஸ்.ரவிகுமார் பகிர்ந்துள்ளார்.

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்'. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து நடிக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். 'கூகுள் குட்டப்பன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.

சபரி - சரவணன் இருவரும் இணைந்து இயக்கவுள்ள இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பூஜையில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து 'கூகுள் குட்டப்பன்' படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பில் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:

" 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தில் சிறு சிறு காட்சிகளை மாற்றியிருக்கிறோம். தர்ஷன் - யோகி பாபு இருவருக்குமான காட்சிகளைக் கொஞ்சம் அதிகரித்துள்ளோம். கதை அதேதான். மலையாளத்தில் எப்படிக் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படங்கள் உள்ளதோ, அதேபோல் தமிழிலும் இருக்கிறது. ஒரு பெரிய ஹீரோவுடன் படம் பண்ணும்போது, கதையுடன் மட்டும்தான் பயணிப்பேன். அந்த நாயகனின் இமேஜைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன் என்று சொல்வது தவறு.

ஏனென்றால், கமர்ஷியல் விஷயங்கள் இருந்தால் மட்டுமே படத்துக்கான ஓப்பனிங் இருக்கும். அது இருந்தால் மட்டுமே போட்ட பணத்தைத் திரும்ப எடுக்க முடியும். இப்போதே தமிழில் நிறைய நல்ல கதையம்சம் உள்ள சின்ன படங்கள் வருகின்றன. அதெல்லாம் கூட இதர மொழிகளில் ரீமேக்கிற்கு வாங்கியிருக்கிறார்கள். ஹீரோ என்ற இமேஜ் வந்தவுடன், அதற்கு மரியாதை கொடுத்து, அதற்குத் தகுந்தாற்போல் படம் பண்ண முடியும்.

விஜய்யை வைத்து 'கருத்த மச்சான்' என்ற பெயரில் படம் பண்ணுகிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டால், அதிலேயே மாஸ் குறைந்துவிடும். பின்பு ஓப்பனிங் இருக்காது. போட்ட பணத்தை எடுக்க முடியாது. இமேஜ் உள்ள ஹீரோக்களுக்குப் படம் பண்ணும் போது அது வேறொரு ஸ்டைல். ஆகையால், நல்ல படங்கள் அனைத்து மொழிகளிலுமே வருகின்றன. மலையாளத்தில் மட்டும்தான் வருகிறது என்று சொல்ல முடியாது"

இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் பேசினார்.

அப்போது "ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பது முடிவாகிவிட்டதால், இனி சினிமாதான். எப்போது அவருடன் இணைந்து" என்ற கேள்விக்கு கே.எஸ்.ரவிகுமார் கூறியதாவது:

"ரஜினி சார் இனி சினிமாவில் மட்டும்தான் என்றவுடன், நான்தான் இயக்கப் போகிறேன் என்று எப்படிச் சொல்ல முடியும். மாதத்துக்கு ஒரு முறையாவது அவர் என்னுடன் தொலைபேசியில் பேசிவிடுவார். நான் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அழைப்பதில்லை. அதற்கே "என்ன பாஸ் மறந்துட்டீங்களா" என்று கேட்பார். 6 மாதத்துக்கு முன்பு சந்திக்கும் போதுகூட அந்த 'ராணா' கதையைக் கேட்க வேண்டும், நான் மறந்துவிட்டேன் என்றார்.

முழுமையாகத் தயாராக இருப்பதால், ஒரு நாள் டைம் கேட்டுவிட்டு வந்து முழுமையாகப் படித்துவிட்டு அடுத்த நாள் போய் சொன்னேன். என்ன மாதிரியான கதை இது, இதைப் பண்ண வேண்டும் என்று ரொம்ப ஆசையாய் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் உடம்பில் வலு வேண்டும். வந்தவுடன் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார். எப்போது பண்ணப் போகிறார், வேறு யாருக்காவது சிபாரிசு செய்கிறாரா என்பதெல்லாம் தெரியாது.

எப்போது நடக்கிறதோ அப்போதுதான் தெரியவரும். அவரோடு படம் பண்ணுகிறேன் என்பதைவிட, அவரோடு தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். பெரிய மார்க்கெட் உள்ள ஹீரோக்கள் எல்லாருமே அவர்கள்தான் எந்த இயக்குநரோடு படம் பண்ண வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதை நாம் முடிவு செய்ய முடியாது".

இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE