சமூக ஊடகங்களிலிருந்து விலகுகிறேன்: ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் அறிவிப்பு

By ஏஎன்ஐ

சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதாக ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் கூறியுள்ளார். இனி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதிலும் எதையும் பகிரப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் கடைசியாகப் பதிவிட்டுள்ள பமீலா ஆண்டர்சன், "இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இதுதான் எனது கடைசிப் பதிவு. எனக்கு என்றுமே சமூக ஊடகங்களில் ஆர்வம் இருந்ததில்லை. இப்போது நான் வாழ்க்கையில் சீரான நிலையில் உள்ளேன். புத்தக வாசிப்பு, இயற்கையுடன் நேரம் செலவிடுவது எனக்கு உண்மையில் உந்துதலைத் தருகிறது. நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் ஆசிகள்.

வாழ்க்கையில் உங்களுக்கான நோக்கத்தை நீங்கள் தேடுவீர்கள் என்றும், அதற்கான வலிமை, உந்துதல் உங்களுக்குக் கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன். நேரத்தை வீணடிக்கும் வேலைகளில் மயங்கி விடாதீர்கள். அதுதான் அவர்களுக்குத் தேவை. உங்கள் மூளையைக் கட்டுப்படுத்தி அதை வைத்து அவர்களால் சம்பாதிக்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் அவர்கள் என்று பமீலா குறிப்பிட்டிருப்பது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைத்தான் என்று ஹாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேபோன்ற அறிவிப்பை ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார்.

53 வயதான பமீலா ஆண்டர்சனை இன்ஸ்டாகிராமில் 12 லட்சம் பேரும், ட்விட்டரில் 10 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். அவரது அறக்கட்டளைக்கான ஃபேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

பமீலாவின் கடைசிப் பதிவுக்குப் பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து பதில் பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE