நாட்டின் விதியைத் தீவிரவாதம் தீர்மானிக்கிறது: விவசாயிகள் போராட்ட வன்முறை குறித்து கங்கணா ட்வீட்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சக பாலிவுட் பிரபலங்களை கடுமையாக விமர்சித்திருக்கும் நடிகை கங்கணா, நாட்டின் விதியைத் தீவிரவாதம் தீர்மானிப்பதாகக் கூறியுள்ளார்.

"இதைத் தடுக்க நான் என்னால் முடிந்ததைச் செய்தேன். ஆனாலும் தோற்றுவிட்டேன். இது எனக்குப் பெரிய தோல்வி. அப்படித்தான் உணர்கிறேன். வெட்கித் தலை குனிகிறேன். எனது தேசத்தின் ஒருமைப்பாடை என்னால் காக்க முடியவில்லை. எல்லோரும் என்ற தன்மை இருக்கும் வரை ஒரு தனி நபராக நான் ஒன்றுமே கிடையாது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கணா பகிர்ந்துள்ளார்.

இதற்கு அவரைப் பின் தொடரும் எண்ணற்ற ட்விட்டர் பயனர்கள் பதிலளிக்க ஆரம்பித்தனர். பாலிவுட் மக்கள் தொடர்பாளர் என்று கூறிக்கொள்ளும் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை 60 லட்சம் பேர் பின் தொடர்வாதகவும், அந்தக் கணக்கிலிருந்து நீண்ட நாட்களாக தேசத்துக்கு எதிரான பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், அதை புகார் அளிக்க வேண்டும் என்றும் ஒரு பயனர் கங்கணாவுக்கு பதிலளித்திருந்தார்.

இதற்கு பதில் கூறிய கங்கணா, "பாலிவுட்டின் இந்த அழுக்கை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். பொழுதுபோக்கு என்கிற போர்வைக்குப் பின்னால் ஒளிந்து தீவிரவாதத்தையும், வன்முறையையும் தூண்டுகின்றனர். இந்த தேசத்தில் சட்டம் என்ற ஒன்று கொஞ்சமாவது மீதமிருந்தால் அவர்களை சிறையில் அடையுங்கள். இந்தக் கரையான்கள் தேசத்தின் எலும்பை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன"என்று ஆவேசமாகப் பதிவிட்டார்.

முன்னதாக விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நடிகர் தில்ஜித் தோஸான்ஜையும் சாடிய கங்கணா, இந்த வன்முறையால் அவர் வருத்தப்பட மாட்டார், ஏனென்றால் இதுதான் அவர் விரும்பியது என்று பகிர்ந்துள்ளார்.

"எந்த முன்னேற்றமும், சீர்திருத்தங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது புரிந்து விட்டது. தீவிரவாதம் தான் நாட்டின் விதியை தீர்மானிக்கிறது. அரசாங்கம் அல்ல. பல பயங்கரங்களுக்குப் பின் சிஏஏ நிறுத்திவைக்கப்பட்டது. விவசாயிகள் மசோதாவும் கண்டிப்பாக ஒதுக்கி வைக்கப்படும் என்பது எனக்குத் தெரியும். தேசப்பற்றுடைய ஒரு அரசாங்கத்தை நம் ஜனநாயகத்தில் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆனால் தேசத்துக்கு எதிரானவர்களே வெற்றி பெறுகின்றனர். இந்தியாவுக்குக் கருப்பு தினம். கூடிய விரைவில் இந்த சட்டங்களை அமல்படுத்தி நம் ஜனநாயகத்தை வெற்றிப் பெறச்செய்யுங்கள்" என்று பிரதமரின் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கங்கணா எழுதியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE