'மாஸ்டர்' ஒரு கேம் சேஞ்சர்: சக்திவேலன் புகழாரம்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' ஒரு கேம் சேஞ்சர் என்று விநியோகஸ்தர் சக்திவேலன் புகழாரம் சூட்டியுள்ளார்.

நரமாமிசம் உண்ணும் காட்டுவாசிக் குழுவை மையமாக வைத்து காமெடி மற்றும் த்ரில்லர் பாணியில் தமிழில் உருவாகியுள்ள படம் 'ட்ரிப்'. பிப்ரவரி 5-ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். சாய் பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, கருணாகரன், சுனைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சக்திவேலன் வெளியிடுகிறார்.

'ட்ரிப்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசியதாவது:

"அனைத்துக் கஷ்டங்களையும் கடந்து வந்துள்ளோம். சமீபத்தில் வெளியான 'மாஸ்டர்' படம் ஒரு கேம் சேஞ்சர் என்றே சொல்லாம். மக்கள் எப்படி திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில், மக்கள் அலை அலையாய் வந்தார்கள். கிட்டத்தட்ட விஜய் சாருடைய முந்தைய படங்களின் வசூலை 10 நாளில் முறியடித்துவிட்டது 'மாஸ்டர்'. மல்டிப்ளக்ஸ் தொடங்கி ஒற்றைத் திரையரங்கம் வரை மக்கள் அலையைத்தான் காண முடிந்தது.

ஓடிடி என்றெல்லாம் பேசும்போது, திரை அனுபவம் என்பது தனி. நல்ல கலைஞன் சரியான படம் பண்ணும்போது, மக்கள் திருவிழாபோல் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். 'மாஸ்டர்' என்ற படத்தின் கேம் சேஞ்சரால், ஓடிடி வெளியீட்டுக்குப் போன பல படங்கள் இப்போது திரையரங்க வெளியீட்டுக்கு வந்துள்ளன. இது சினிமாவுக்கு ஒரு ஆக்ஸிஜன் மாதிரி. இன்றைய திரையுலகினருக்கு 'மாஸ்டர்' படத்தின் வசூல் என்பது ஒரு எனர்ஜி மாதிரி. நல்ல படங்கள் கொடுத்தால் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சினிமா மீது பெரும் அர்ப்பணிப்பும் காதலும் கொண்ட 'ட்ரிப்' படத்தின் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் பெரிய பட்ஜெட்டில் எடுத்துள்ளார்கள். யோகி பாபுவை வைத்து இயல்பாக எடுக்கப்படும் பட்ஜெட்டை விட பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள்.

இப்படத்தில் கண்டிப்பாக நல்ல லாபத்தை அடைவார்கள். பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தைத் தயாரித்த அவர்களுக்கு வாழ்த்துகள். யோகி பாபு, கருணாகரன் மற்றும் முதல் படத்தில் நடித்துள்ள அனைவரும் படத்தை மிகச் சிறப்பான படமாக மாற்றியுள்ளனர். இப்படம் கண்டிப்பாக கமர்ஷியலாக பெரும் வெற்றி பெறும். இப்படத்தில் நானும் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி".

இவ்வாறு சக்திவேலன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE