சுஷாந்த் செய்த தவறு: கங்கணா ரணாவத் ட்வீட்

By ஐஏஎன்எஸ்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் செய்த தவறு என்ன என்பது குறித்து நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் வெளியான 'பங்கா' திரைப்படத்தில் கங்கணாவின் நடிப்பைப் பாராட்டி ஒரு செய்தி இணையதளம் ட்வீட் செய்திருந்தது. இதற்கு பதில் அளித்த கங்கணா, "எனக்கு வாக்கெடுப்பு, நடுவர் குழு ஆகியவற்றின் அங்கீகாரம் எதுவும் தேவையில்லை. அவர்களுக்கு அதிகாரத்தைத் தரும்போதுதான் மாஃபியா அவர்களுக்கு விலை நிர்ணயிக்கிறது.

சுஷாந்த் இந்தத் தவறைத்தான் செய்தார். தன்னைப் பற்றி அவர்களைத் தீர்மானிக்க வைத்தார். நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இந்த உலகம் உங்களுக்கு அதைச் சொல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் யார் என்று எனக்குத் தெரியும். எனவே, உங்கள் அங்கீகாரத்துக்கு நன்றி. ஆனால், அது தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை, சிபிஐ விசாரணை என இந்த விஷயம் பரபரப்பானது.

இதில் ஆரம்பம் முதலே கரண் ஜோஹர் உள்ளிட்ட பாலிவுட் வாரிசுகள் சுஷாந்தை ஓரங்கட்டினர். இந்த மன உளைச்சலால்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என நடிகை கங்கணா ரணாவத் குற்றம் சாட்டி வந்துள்ளார். மேலும், பாலிவுட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

சமீபகாலமாக சுஷாந்த் பற்றி எதுவும் கருத்துப் பகிராமல் இருந்த கங்கணா தற்போது மீண்டும் சுஷாந்த் குறித்துப் பேசியுள்ளார்.

மேலும், மற்றொரு ட்வீட்டில், "மற்றவர்களோ, இந்த அமைப்போ உங்களைக் கைவிடும்போது உங்களிடம் நீங்கள் கனிவாக இருக்க வேண்டியது இன்னும் முக்கியமாகிறது. மற்றவர்கள் தங்களை விரும்பவில்லை என்ற காரணத்துக்காகப் பலர் தங்களை வெறுக்கின்றனர். அந்தத் தவறை செய்யவே செய்யாதீர்கள். உங்கள் மதிப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று கங்கணா பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE