கரோனா அச்சுறுத்தல்: மீண்டும் ’நோ டைம் டு டை’ வெளியீடு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

டேனியல் க்ரெய்க் கடைசியாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'நோ டைம் டு டை'. கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாக வேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'நோ டைம் டு டை' வெளியாகும் என்று எம்ஜிஎம் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் ஜேம்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

'நோ டைம் டு டை' படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதற்காக 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இதற்கான விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன. ஆனால் இந்தச் செய்திகள் அனைத்தையும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம் மறுத்திருந்தது.

இன்னும் சர்வதேச அளவில் கரோனா நெருக்கடி முடிவுக்கு வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இப்படித் தள்ளிவைத்திருப்பதால் எம்ஜிஎம் நிறுவனத்துக்கு பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் தயாராகியுள்ள 'நோ டைம் டு டை', டேனியல் க்ரெய்க் ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம். ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இது 25-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE