வன்முறையை தூண்டுவதாக புகார்: தற்காலிகமாக முடக்கப்பட்ட கங்கனாவின் ட்விட்டர் பக்கம்

By செய்திப்பிரிவு

சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் 'தாண்டவ்', வெள்ளிக்கிழமை அன்று அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியானது. அலி அப்பாஸ் ஸாஃபர் உருவாக்கி, இயக்கி, தயாரித்திருக்கும் இந்தத் தொடரை ‘ஆர்டிகள் 15’ திரைப்படத்தின் கதாசிரியர் கௌரவ் சொலாங்கி எழுதியுள்ளார்.

இந்துக் கடவுள்களைப் பரிகாசம் செய்வதால் தாண்டவ் வெப் சீரிஸைத் தடை செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. மனோஜ் கோடக் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

தொடர்ந்து ஓடிடி தளங்களில் இந்துக் கடவுள்களை நல்ல முறையில் காட்டக்கூடாது என்ற முயற்சிகள் நடந்து வருவதாக அக்கடிதத்தில் மனோஜ் கோடக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ‘தாண்டவ்’ வெப் சீரிஸை அமேசான் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை முதல் விவசாயிகள் போராட்டம் வரை அனைத்து விவகாராங்களிலும் கருத்து தெரிவித்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நடிகை கங்கனா ரனாவத் ‘தாண்டவ்’ விவகாரத்திலும் கருத்து தெரிவித்தார்.

வழக்கம்போலவே அவர் கூறிய கருத்துக்கள் வன்முறைய தூண்டும் விதமாக இருப்பதாக பலரும் விமர்சித்தனர். உடனடியாக அப்பதிவை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கினார். எனினும் அந்த பதிவின் ஸ்க்ரீன்ஷாட் படத்தை அனைவரும் பகிர்ந்து வந்ததால் அது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கணக்கை முடக்கிய ட்விட்டர் நிர்வாகம் கங்கனா விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன்? அமெரிக்காவில் ஒரு நிலைப்பாடு, இந்தியாவில் ஒரு நிலைப்பாடா? என்ற ரீதியில் பலரும் ட்விட்டர் நிர்வாகத்தை கடுமையாக சாடி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (20.01.21) கங்கனாவால் எந்த ஒரு பதிவோ பின்னூட்டமோ இடாத வகையில் அவரது ட்விட்டர் கணக்கை தற்காலிகமாக முடக்கியது ட்விட்டர் நிர்வாகம். இதற்கு கங்கனாவின் ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து ட்விட்டர் நிர்வாக அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

ட்விட்டர் விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கணக்கின் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எங்கள் சேவையில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். எனினும் எங்களுடைய கொள்கையின்படி எந்தவொரு தனிநபரரையோ அல்லது பிற மக்களையோ குறித்தவைத்து தாக்குதலில் யாரும் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு ட்விட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

தற்காலிக முடக்கம் முடிந்ததும் கங்கனா ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக்கை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தலையை வெட்டுவது என்பது ஒரு சொலவடை. அதற்கு திட்டுவது என்று அர்த்தம் என்பதை உங்கள் முட்டாள் பிரதிநிதிகளுக்கு புரியவையுங்கள். உண்மையில் அச்சுறுத்தும் நபர்களையும், தினமும் பிரதமர், உள்துறை அமைச்சர், துறவிகள், பிராமணர்கள் சாக வேண்டும் என்று விரும்புபவர்கள் மீதும் இதே போல நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE