அக்‌ஷய் குமாரின் 'பெல்பாட்டம்' ஓடிடி வெளியீடா? 

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பெல்பாட்டம்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா நெருக்கடி காரணமாகப் பல மாதங்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் வெளியீட்டுக்குத் தயாராக இருந்த திரைப்படங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாத நிலையில் இருக்கும் படங்கள் ஒவ்வொன்றாக ஓடிடி தளங்களில் நேரடி வெளியீடாக வர ஆரம்பித்தன. முதலில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் மட்டுமே அப்படி வெளியாகின.

பின்பு தீபாவளியை முன்னிட்டு, அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான 'லக்‌ஷ்மி' திரைப்படம் நேரடி டிஜிட்டல் வெளியீடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான முதல் பெரிய பட்ஜெட், முன்னணி நட்சத்திரத்தின் திரைப்படமும் இதுவே. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அதிருப்தி அடைந்தாலும் அப்போதைய சூழலில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று நிச்சயமற்ற நிலை நிலவியதால் இந்த முடிவு தவிர்க்க முடியாத ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியானால் அவை கணிசமான ரசிகர்களை அரங்குக்கு வரவழைக்கும் என்று உரிமையாளர்கள் நினைக்கின்றனர். இதனால் சல்மான் கானின் 'ராதே' திரைப்படத்தைத் திரையரங்கில்தான் வெளியிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அமைப்பு கோரிக்கை வைத்தது. சல்மான் கானும், கண்டிப்பாகப் படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில், அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் 'பெல்பாட்டம்' திரைப்படமும் ஓடிடியில் நேரடியாக வெளியாகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அமேசான் ப்ரைம் தரப்புடன் நடந்துவரும் இந்தப் பேச்சுவார்த்தையில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும், இன்னும் ஒரு மாதத்தில் இதுகுறித்த முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

'லக்‌ஷ்மி' வெளியீட்டுக்கு முன்பு வெளியான 'பெல்பாட்டம்' படத்தின் டீஸரில், படம் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் அக்‌ஷய் குமாரின் மற்றொரு படமான 'சூர்ய்வன்ஷி'யும் வெளியாகவிருப்பதால் அந்த நேரத்தில் 'பெல்பாட்டம்' வெளியாவது சாத்தியமற்றது. மேலும், தொடர்ந்து அக்‌ஷய் குமார் பல்வேறு படங்களில் நடித்து வருவதால் 'பெல்பாட்டம்' படத்தை டிஜிட்டலில் வெளியிடுவதால் பெரிய பிரச்சினை வராது என தயாரிப்புத் தரப்பு யோசித்து வருகிறது.

ஆனால், ஒருவேளை 'பெல்பாட்டம்' நேரடி டிஜிட்டல் வெளியீடு என்று முடிவானால், அது கண்டிப்பாக திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே பெரிய அதிருப்தியை உண்டாக்கி புதிய சர்ச்சைக்கு அடித்தளம் போடும் என்றே வர்த்தக நிபுணர்கள் நினைக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE