உலக அளவில் முதல் இடம்; சென்னையில் அரிய சாதனை: 'மாஸ்டர்' படக்குழுவினர் குஷி

By செய்திப்பிரிவு

உலக அளவில் முதலிடம் மற்றும் தொடர்ச்சியாக அரங்கு நிறைந்த காட்சிகள் என 'மாஸ்டர்' படம் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

சுமார் 10 மாதங்கள் காத்திருப்புக்குப் பின் ஜனவரி 13-ம் தேதி வெளியானது 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பு வெளியாகிவிட்டன. டீஸர் மட்டுமே வெளியாகாமல் இருந்தது. நவம்பர் மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டதால், பொங்கல் விடுமுறையைக் கணக்கில் கொண்டு 'மாஸ்டர்' வெளியானது.

திரையரங்க உரிமையாளர்களோ மக்கள் மீண்டும் திரையரங்கிற்கு வரவேண்டும் என்றால் 'மாஸ்டர்' வெளியாக வேண்டும் எனக் காத்திருந்தனர். இதனால் ஜனவரி 13-ம் தேதி தமிழகத்தில் மட்டுமன்றி பல்வேறு இடங்களில் சுமார் 90% திரையரங்குகளில் வெளியானது 'மாஸ்டர்'. திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

சுமார் 5 நாட்கள் வசூலில் 150 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது 'மாஸ்டர்'. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஏனென்றால் தமிழகத்தைத் தவிர்த்து மீதமுள்ள மாநிலங்களில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்பது தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் முதல் நாளில் 100% இருக்கைக்கு சில திரையரங்குகள் அனுமதியளித்தன.

சென்னையில் முதல் நாளில் அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது 'மாஸ்டர்'. என்னவென்றால் 'தர்பார்' திரைப்படம் வெளியான நாளில் சென்னையில் மட்டும் அனைத்துத் திரையரங்குகளும் சேர்த்து 334 காட்சிகள் திரையிடப்பட்டன. அதனைப் பெருவாரியான எண்ணிக்கையில் முறியடித்துள்ளது 'மாஸ்டர்'. பல்வேறு திரையரங்குகளில் 7 காட்சிகள், 6 காட்சிகள் எனத் திரையிடப்பட்டதால் சென்னையில் மட்டும் 374 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை முறியடிப்பது இனிமேல் கடினம் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். 90% திரையரங்குகளில் வெளியானதால், இது சாத்தியமாகியுள்ளது என்றார்கள்.

அதேபோல், உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.150 கோடியைத் தாண்டி முதல் இடத்தைப் பிடித்துள்ளது 'மாஸ்டர்'. இதற்குக் காரணம், ஹாலிவுட், பாலிவுட் (முன்னணி நடிகர்களின் படங்கள்) படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. ஆகையால், இந்த வரிசையில் முதன்முறையாக ஒரு இந்தியப் படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.80 கோடியைத் தாண்டியுள்ளது 'மாஸ்டர்'. விரைவில் உலக அளவிலான வசூல் ரூ.200 கோடியையும், தமிழக வசூலில் ரூ.100 கோடியையும் 'மாஸ்டர்' தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE