98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர் 

By செய்திப்பிரிவு

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்', 'பம்மல் கே சம்பந்தம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி (98), கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.

நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மலையாளத் திரைப்படங்களில் தாத்தா கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர். இவரது மருமகன் கைதப்ரம் தாமோதரன் பாடலாசிரியராக உள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன் கண்ணூர் மருத்துவமனையில் உன்னிகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் தீவிரமாக இருந்தது. அப்போது அவருக்குக் கரோனா தொற்று இல்லை என்றே பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

நிமோனியா பிரச்சினை தீர்ந்த பிறகு மருத்துவமனையிலிருந்து உன்னிகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார். ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் காய்ச்சல் வந்ததால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இம்முறை அவருக்குக் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு நாட்கள் இருந்த அவர், தொற்று நீங்கிய பிறகு உடல்நிலை தேறினார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று செய்த பரிசோதனையில் உன்னிகிருஷ்ணனுக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அவரது மகன் பவதாசன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தனது தந்தை ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதாகவும், அவருக்கு எந்த வித வியாதிகளும் இல்லை என்றும் பவதாசன் கூறியுள்ளார். மேலும், உன்னிகிருஷ்ணன் ஜிம்முக்குச் சொந்தக்காரராக இருந்தார். சிறு வயதிலிருந்தே உடலை ஆரோக்கியமாகக், கச்சிதமாக வைத்திருப்பதில் ஈடுபாடு காட்டி வருபவர். பாடி பில்டிங்கும் செய்துள்ளார்.

அவரது ஆரோக்கியமான வாழ்க்கை முறையே அவர் தொற்றிலிருந்து மீண்டு வரக் காரணம் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE