புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது ரசிகர்: காணொலி மூலம் குணமடைய வாழ்த்திய ரயன் ரேனால்ட்ஸ்

By ஐஏஎன்எஸ்

டெட்பூல் ரசிகரான 11 வயது ப்ராடி டெரி என்கிற சிறுவனுக்காக நடிகர் ரயன் ரேனால்ட்ஸ் காணொலி ஒன்றைப் பதிவு செய்து அனுப்பியுள்ளார்.

ஹாட்ஜ்கின்ஸ் லிம்ஃபோமா என்கிற புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர் ப்ராடி டெரி. 11 வயதான இவருக்குப் புற்றுநோய் முற்றியுள்ளது. இவர் டெட்பூல் திரைப்படங்களின் தீவிரமான ரசிகர். இவர் குறித்துக் கேள்விப்பட்ட டெட் பூல் படத்தின் நாயகன் ரயன் ரேனால்ட்ஸ், ப்ராடிக்காக காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்தக் காணொலியில், "ப்ராடி, இது ரயன் ரேனால்ட்ஸ். நான் உன்னைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொண்டேன். நான் உன்னைப் பற்றிச் சிந்திக்கிறேன், நிறைய அன்பையும், எனக்கிருக்கும் அத்தனை வலிமையையும் உனக்கு அனுப்புகிறேன் என்பதை இந்தக் காணொலியின் மூலம் உனக்குக் தெரிவிக்க விரும்புகிறேன்.

உன்னை விரும்பும் பல பேர் உன் வாழ்க்கையில் உள்ளனர். நீ நிறையப் பிரச்சினைகளைக் கடந்து வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். அதுவும் சமீப காலத்தில் அவை பெரிய சவால்களாக மாறியுள்ளன என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், இதையெல்லாம் கடந்து வர உகந்தவன் நீ. அதனால் நான் உனக்கு நிறைய அன்பை அனுப்புகிறேன்.

அப்படியே பொறுத்துக் காத்திரு, ஒரு நாள் நான் உன்னைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன்" என்று ரயன் பேசியுள்ளார்.

இந்தக் காணொலி பற்றிப் பேசியிருக்கும் ப்ராடியின் அம்மா ராண்டி, இந்தக் காணொலியைப் பார்த்து தனது மகன் வாயைப் பிளந்து ஆச்சரியப்பட்டதாகவும், தான் தற்போது மிகவும் விசேஷமானவனாக, ஒரு திரைப்பட நட்சத்திரத்தைப் போல உணர்வதாகக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE