'க/பெ ரணசிங்கம்' இயக்குநர் படத்தில் சசிகுமார்

'க/பெ ரணசிங்கம்' இயக்குநர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார் சசிகுமார்.

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'க/பெ ரணசிங்கம்'. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் டிடிஹெச் மற்றும் ஓடிடி தளம் ஆகியவற்றில் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து விருமாண்டியின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

தற்போது தனது அடுத்த படத்துக்கான கதையை இறுதி செய்து, திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறார் விருமாண்டி. இந்தக் கதையைக் கேட்ட சசிகுமார், உடனடியாக நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

விரைவில் தயாரிப்பாளர் முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE