ஜக்குவும் மக்குவும் நண்பர்கள். ஜக்கு மட்டும் 'பூமி' படம் பார்த்துவிட்டார். மக்கு பார்க்கவில்லை. இந்த நிலையில் அப்படம் குறித்து அவர்களிடையே நடக்கும் உரையாடல் இது.
மக்கு: ஏன் ஜக்கு என்னை விட்டுப் படம் பார்த்தே. நான் போன் பேசிட்டு வர்றதுக்குள்ளே அப்படி என்ன அவசரம்?
ஜக்கு: நீ போன் பேசி முடிக்குறதுக்குள்ளே நான் படமே பார்த்துட்டேன் நண்பா.
மக்கு: நிஜமாவா சொல்ற? எவ்ளோ ரன்னிங் டைம்? ஷார்ட் ஃபிலிம் பார்க்குற டைம் தானா?
ஜக்கு: இல்லைப்பா.. படம் 2 மணி நேரம் 8 நிமிஷம்தான். ஆனா, 4 மணி நேரம் பார்த்த அசதி.... முடியலை.. நீ சொல்ற மாதிரி ஷார்ட் ஃபிலிம், டாக்குமென்ட்ரியா இருந்திருந்தா கூட நல்லதா அமைஞ்சிருக்கும்.
மக்கு: டீஸர், ட்ரெய்லர்லாம் பார்த்தா கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு நினைச்சேன்.
ஜக்கு: நானும் அப்படிதான் நினைச்சேன். விவசாயம், கார்ப்பரேட்னு ரெண்டு புள்ளிகளையும் பிரதானப்படுத்தி இருக்கும்போதே சூதனமா இருந்திருக்கணும். இப்போ காதுல ரத்தம் வராததுதான் மிச்சம்.
மக்கு: நம்பவே முடியலை ஜக்கு. ஜெயம் ரவி, அவர் அண்ணன் படங்களுக்குப் பிறகு மூணாவது முறையா இயக்குநர் லக்ஷ்மணோட இணைஞ்சிருக்கார்னா விஷயம் இல்லாமயா இருக்கும்?
ஜக்கு: கரெக்ட்தான். 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' பெருசா ஏமாத்தலைன்னுதான் இந்தப் படத்தையும் நம்பினேன். சோகம் என்னான்னா வெறுமனே வாட்ஸ் அப் மேசேஜ்களே வசனமாகவும், திரைக்கதைத் திருப்பங்கள்ங்கிற பேர்ல காட்சிகளை அப்படியே அடுக்கி வெச்சி... நம்மை செஞ்சிருக்காங்க.
மக்கு: அப்படி என்னதான் கதை. 'கத்தி', 'காப்பான்' மாதிரிதான் இருக்கா?
ஜக்கு: கார்ப்பரேட்டை எதிர்க்கும் விவசாயியின் போராட்டம்தான். இப்படி ஒன்லைன்ல சொல்லி நெட்டிசன்கள் ஓட்டக்கூடாதுன்னு கொஞ்சம் மாத்தி இருக்காங்க.
மக்கு: எப்படி?
ஜக்கு: ஜெயம் ரவி நாசாவுல விஞ்ஞானியா இருக்கார். பூமியில மனிதர்கள் வாழ்ற மாதிரி செவ்வாய் கிரகத்துலயும் மனிதர்கள் வாழ்ற அளவுக்கு மாத்த முடியும்னு ஆராய்ச்சி மேற்கொள்றார். மனிதர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை அங்கே உருவாக்க பயிரிட்டு, மரங்களை நட முயற்சி செய்றார். அதுக்காகத் திட்டம் தீட்டுறார். ஒரு விதை மூலம் இன்னொரு புது உலத்தை உருவாக்க முடியும்னு சொல்றார். இந்த திட்டப் பணி முடிக்க மூணு, நாலு வருஷம் ஆகும்னு ஒரு மாசம் லீவ் எடுத்துக்கிட்டு திருநெல்வேலியில் இருக்கும் தன் சொந்த கிராமத்துக்கு வர்றார்.
மக்கு: விவசாய பூமியைச் சேர்ந்தவர் நாசா விஞ்ஞானி. செம்ம ப்ரோ.
ஜக்கு: அங்கேதான் ட்விஸ்ட் இருக்கு. தான் விஞ்ஞானியா இருக்குறதுக்கு வேலுச்சாமிங்கிற அண்ணன்தான் இன்ஸ்பிரேஷன்னு பேட்டியில சொல்றார். அந்த வேலுச்சாமி அண்ணன் விவசாயிகள் போராட்டத்துல களம் இறங்கும்போதுதான், ஜெயம் ரவி தன் சொந்த ஊர்ல விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க, பயிர்கள் கருகி, கடன் கட்ட முடியாம தவிக்குறாங்கன்னு தெரிஞ்சுக்குறார். அந்த வேலுச்சாமி அண்ணன் கலெக்டர் ஆபிஸ்ல தீக்குளிச்சு உயிர் விடும்போதுதான் தன் உழைப்பு நாசாவுக்குத் தேவையில்லை. இந்த ஊருக்குத்தான் தேவைன்னு உணர்ந்து போராடுறாரு.
மக்கு: கதை சுவாரஸ்யமாதான் இருக்கு. நிஜத்துல நடக்குற சம்பவத்தைத்தானே காட்டுறாங்க.
ஜக்கு: படம் முழுக்கச் சொல்லணும்னா இந்த ஒரு விஷயம் மட்டும்தான் உண்மை. நடப்புச் சம்பவத்தின் பிரதிபலிப்பு. ஆனா, அதுலயும் நம்பகத்தன்மை துளியும் இல்லை.
மக்கு: எப்படிச் சொல்ற?
ஜக்கு: வேலுச்சாமி கதாபாத்திரத்துல தம்பிராமையா நடிச்சிருக்கார். அவரோட சுமார் 50 பேர் போராட்டம் பண்றாங்க. கலெக்டர் அதே இடத்துல ஜீப்ல இருந்துகிட்டே தடியடி நடத்தச் சொல்றார். போலீஸும் எந்த எச்சரிக்கையும் கொடுக்காம உடனே தடியடி நடத்தி, வெடி வெச்சுத் தகர்த்து ரத்தக்களறியா விவசாயிகளைத் தெறிக்க தெறிக்க ஓட விடுறாங்க.
மக்கு: அப்படி எங்கேயுமே நடக்குறது இல்லையா?
ஜக்கு: நடக்கலாம். ஆனா, அதுக்கு முன்னே சின்ன எச்சரிக்கை, அறிவுறுத்தல், பேச்சுவார்த்தை எல்லாம் நடக்காம ஸ்ட்ரெயிட்டா வன்முறையைக் காவல்துறை கையில் எடுக்குமா? மருந்துக்கும் ஒரு அரசு அதிகாரியையும், ஏன் அமைச்சரையும் நல்லவங்களாகக் காட்டலை. எல்லோருமே அயோக்கியர்கள்னு நிறுவுறாங்க.
மக்கு: படம்னா இப்படிக் காட்டுறது சகஜம்தானே?
ஜக்கு: அது எல்லை மீறி, நம்ப முடியாத அளவுக்குப் போறதுதான் அபத்தத்தின் உச்சம். தம்பி ராமையா இறந்த பிறகு அமைச்சர் ராதாரவி அங்கே வர்றார். உடனே அவருக்கும் ஜெயம் ரவிக்கும் வார்த்தை மோதல் வெடிக்குது. அவரும் நிதானமா பதில் சொல்றார். உடனே நாசாவுல ஜெயம் ரவிக்கு அபராதம் விதிக்க, அந்த வேலையை உதறிட்டு விவசாயியா களம் இறங்குறார்.
ஒரே பாட்ல ஓஹோன்னு விளைச்சலைக் கொடுத்துட்டு, 5 மாசத்துல 6 லட்சத்து 22 ஆயிரம் சம்பாதிச்சு வரி கட்டுறேன்னு சொல்றார். அடுத்த வருஷம்தானே வரி கட்ட முடியும். சரி.. இதை விடு. உடனே சாதனைத் தமிழன்னு தொலைக்காட்சிக்கு சிறப்புப் பேட்டி கொடுக்கிறார். ஒரே பாட்டு, ஒரே பேட்டியில் ஜெயம் ரவி பெரிய ஆள் ஆகிடுறார்.
மக்கு: லேசா... கண்ணைக் கட்டுதே... எதையெல்லாம் யூகிக்கிறோமோ அதெல்லாம் அடுத்தடுத்து வருதோ?
ஜக்கு: அப்படியேதான். விதைப் பண்ணை அழிப்பு, கார்ப்பரேட் வில்லன் என்ட்ரின்னு மூச்சு முட்ற அளவுக்குப் பேசிக்கிட்டே இருக்காங்க. இதுல என்ன காமெடின்னா... ''13 பேர்தான் இந்த உலகத்தையே ஆள்றாங்க. உன் மண் எனக்கு அடிமை. உன் அரசாங்கம் எனக்கு அடிமை''ன்னு பன்ச் பேசுறதுக்காகவே கார்ப்பரேட் வில்லன் ஹெலிகாப்டர்ல வந்து இறங்கி ஜெயம் ரவிக்கு மரண பயத்தைக் காட்டி மன்னிச்சு விடறார். இது எப்படி இருக்கு?
மக்கு: பேஷ்... பேஷ்...
ஜக்கு: இந்தியாவையே வாங்குற, இந்தியாவையே விற்குற அளவுக்கு சக்தி வாய்ந்த வில்லன் ரோனித் ராய், பல நாடுகள்ல தொழில் ஒப்பந்தம் போட்டாலும் தமிழ்நாட்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்குறதுலதான் ஆர்வமா இருக்குறார். எந்த நாட்ல இருந்தாலும் தமிழ்நாட்டுச் செய்திகளைத்தான் லைவ்ல பார்க்குறார். அவருக்கு இருக்கிற ஒரே எதிரி தமிழ்நாட்ல ஒரு சிறு கிராமத்துல சுமார் 50 பேருக்கு பாரம்பரிய விதைத் திருவிழா நடத்தி விதை கொடுக்க முயற்சி செய்ற ஜெயம் ரவிதான். அதுவும் ஜெயம் ரவி பெரிய அளவுக்கு நிலங்களை வெச்சு இருக்குறவர் இல்லை. வெறும் 2 ஏக்கர்தான். ஜெயம் ரவி சொல்ற விஷயம். ஒரு ஏக்கர்ல விவசாயம் செய்து ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்ங்கிறதுதான். ஆனால், இதுதான் மிகப்பெரிய கார்ப்பரேட் வில்லனுக்கும், அமைச்சர் அண்ட் கோவுக்கும் உறுத்தி, ஹீரோவை அழிக்கப் பார்க்குறாங்கன்னா பார்த்துக்கோயேன்.
மக்கு: அப்போ சின்ன தூசி அளவுக்குக்கூட தனக்குத் தெரியாம எதுவும் நடக்கக்கூடாது, எல்லாப் பொருளையும் தன் கம்பெனிகிட்ட இருந்தே வாங்கணும்னு நினைக்குற பவர்ஃபுல் வில்லனா?
ஜக்கு: நல்ல காமெடி. வில்லனா ரோனித் ராய் நடிச்சிருக்கார். வாய்க்கும், அந்த வார்த்தைக்கும் வலிக்காத மாதிரி லேசாத்தான் பேசுறார். நாடு விட்டு நாடு தாண்டி விமானத்துலயே பறக்குற அளவுக்கு இருக்கும் அந்த பிஸி மேன், தமிழ்நாட்டு அமைச்சரைக் கொல்லும் அடியாள் வேலையை அமோகமா பண்றார். தாசில்தார், கலெக்டருக்கும் இதேமாதிரி ட்ரீட்மென்ட்தான்.
இன்னொரு பக்கம், நீதிமன்றத்துல நீதிபதியை அவமானப்படுத்தி, இந்த அரசாங்கம் எனக்கு அடிமைன்னு கொக்கரிக்குறார். பத்தாததுக்கு, எந்த நாட்ல இருந்தாலும் குடும்பத்துல ஒருத்தர்கிட்ட பேசுற மாதிரி ஹீரோ கிட்ட பேசி தான் என்னென்ன சதி பண்றேன்னு அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கார். இதனாலேயே அவரோட மொத்த பில்டப்பும் சரிஞ்சு கதாபாத்திரப் படைப்பில் பள்ளத்தாக்கே உருவாகிடுச்சு.
மக்கு: விவசாயம் சம்பந்தமான விஷயங்கள் ஃபேஷனுக்காக இருக்கா?
ஜக்கு: இல்லை. ஆனா, வாட்ஸ் அப் செய்திகள்லாம் வசனங்களாவும், காட்சிகளாகவும் வருது. எது உண்மை, பொய்னே தெரியாம அளந்து விட்டிருக்காங்க. ஒரு கார் தயாரிக்க 5 லட்சம் லிட்டம் தண்ணீர் வீணாகுது முதற்கொண்டு நிறைய.... லிஸ்ட் போட்டா நம்ம தாகத்துக்குத் தண்ணி குடிக்கணும்.
மக்கு: விவசாயத்துல எந்தப் பிரச்சினையை பிரதானமா பேசுறாங்க?
ஜக்கு: எல்லாத்தையும். பசுமைப்புரட்சி, நாட்டு விதை, மரபணு மாற்றப்பட்ட விதை, வீரிய விதை, உரம் தயாரிக்கும் பண்ணை, பாரம்பரிய விதைத் திருவிழா, விளைபொருளைத் தானே விற்குறது, அதுக்கு கார்ப்பரேட் அமைப்பு மாதிரி தானே உருவாக்குறது, லோடு கொண்டுபோற வண்டியையே கடையா மாத்துறது, உள்ளூர் பொருளை விற்கவிடாம முடக்கும் கார்ப்பரேட்டின் அடுத்தடுத்த சதிகள் எல்லாத்தையும் பேசுறாங்க. ஆனா, எதிலும் அழுத்தம் இல்லை. அப்படியே ஜம்ப்பாகி ஜம்ப்பாகி அடுத்தடுத்த பிரச்சினைக்குத் தாவுறாங்க.
மக்கு: லாஜிக் பிரச்சினைகள் அதிகம் இருக்கும் போலயே?
ஜக்கு: ஆமாம். கார்ப்பரேட்டை எதிர்த்து வேற ஒரு கார்ப்பரேட் வலைப்பின்னல், சர்வாதிகாரத்தை எதிர்த்து சர்வ அதிகாரத்தை வளர்க்குறதுன்னு ஹீரோ பேசுறார். ரோனித் ராய் எந்த விதைகளையும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கொடுக்க முடியாதுன்னு சொல்றப்போ, தமிழ்நாட்டுக் கோயில் கோபுரக் கலசங்கள்ல இருக்குற நாட்டு விதையை வெச்சு தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக் கொடுத்து விவசாயம் பண்ணலாம்னு ஹீரோ ஆலோசனை சொல்றார். கார்ப்பரேட் கை வசம் 1% நிலம் மட்டும்தான் இருக்கு. விவசாயிகள் கைவசம் 60% நிலங்கள் இருக்கு. அதுல விவசாயம் பண்ணலாம்னு சொல்றார். ஆனா, இங்கேதான் லாஜிக் இடிக்குது.
ஆயிரக்கணக்கில்தான் தமிழ்நாட்டில் கோயில்கள் இருக்கு. விவசாயிகள் லட்சக்கணக்கில் இருக்காங்கன்னு வெச்சிக்கிட்டாலும் அந்த விதைகள் எப்படி போதுமானதா இருக்கமுடியும்? புள்ளிவிவரப் புலியா படம் முழுக்க வெச்சிட்டு, அவங்களே இப்படி சொதப்புனா நல்லாவா இருக்கும்? அதுவும் எப்படி ஒரு மூலையில இருக்குற கிராமத்து விவசாயி ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஒன்றிணைக்க முடியும்? கூட்டு முயற்சியில் விவசாயிகள் மாநில அளவில் இணைவது எப்படிச் சாத்தியமாகும்?
ஜெயம் ரவியோட ஊர் சிறு கிராமம்னு சொல்றாங்க. அங்கே ஜீன்ஸ் தொழிற்சாலை, கார் தொழிற்சாலை இருக்கு. இன்னொரு பக்கம் ரியல் எஸ்டேட்ல நிலங்கள் நல்ல விற்பனைக்குப் போகுது. அதே சமயம் விவசாயிகள் பயிர்க் காப்பீடு கேட்டு போராடுறாங்க.. இப்போ சொல்லு.. இது கிராமம்னு நம்பத் தோணுதா?
மக்கு: இல்லவே இல்லை. உழவா உழ வான்னு சித் ஸ்ரீராம் வேற தன் குரலைக் குழைச்சு பிரமாதப்படுத்தி இருப்பாரே?
ஜக்கு: அந்தப் பாட்டை நீ முழுசா கவனிக்கலையா? இலவச மின்சாரம் வேண்டாம், ஒளியினில் மின்சாரம் காண்போம், கடன்களை நீ நீக்க வேண்டாம், உழைப்பினில் எல்லாமே தீர்ப்போம்னு பாட்டு வருது. நிஜமாவே இதைப் புரிதலோட சொல்லி இருக்காங்களா? ஃபேண்டஸிக்கு இடம் கொடுத்து, அடிப்படைப் பிரச்சினையைப் புரிஞ்சுக்காம எழுதி இருக்காங்க.
அது இல்லாம தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடான்னும் கூவுறாங்க. கடைசியில வந்தே மாதரம்னு மாறிடுறாங்க. இது தமிழ்ப்பற்றுக்காகவா, தேசப்பற்றுக்காகவா, விவசாயத்துக்காகவான்னு பாவம் டைரக்டரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு.
மக்கு: அப்பாடா... புதிய வேளாண் சட்டங்களைப் பத்திதான் இல்லை.
ஜக்கு: அப்படிச் சொல்ல முடியாது, அதையும் மறைமுகமா நூதனமா சொல்றாங்க. நீ படத்தைப் பாரு மச்சி.
மக்கு: அடேய்... நல்ல எண்ணம்டா உனக்கு.
ஜக்கு: நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம். நண்பன்ங்கிறவன் சந்தோஷத்துக்கு மட்டுமில்ல... துக்கத்துக்கும் கூட இருப்பவன்னு அடிக்கடி நீயே சொல்வல்ல.. இப்போ கூட இரு.
மக்கு: சரி சரி... ஜெயம் ரவி எப்படி நடிச்சிருக்கார்?
ஜக்கு: அவருக்கு இது 25-வது படம். ஒரு வளரும் நடிகனுக்கு 25-வது படம்னா தியேட்டர்ல கொண்டாட்டம் களை கட்டி இருக்கும். ஜெயம் ரவி நடிப்புல குறை சொல்ல முடியாது. நல்லாப் பண்ணியிருக்கார். நாசா விஞ்ஞானி, விவசாயி, கிராமத்துக்காக குரல் கொடுக்கும் கோபமான இளைஞர்னு நடிப்புக்கான ஸ்பேஸை ஃபில் பண்ணியிருக்கார்.
அப்பப்போ... மண்ணை எடுத்து சட்டையில பூசிக்கிட்டு அந்த மண் சட்டையில இருந்து உதறிப் போற வரைக்கும் ஆட்டம் ஆடுறார். அதை மட்டும் கொஞ்சம் குறைச்சிருக்கலாம். 'கடன் பிரச்சினையில போன கடைசி உயிர் இவரோடதா இருக்கட்டும்'னு ஆவேசமாகப் பேசுறார். இப்படிப் படம் முழுக்க சமுத்திரக்கனிக்கு டஃப் ஃபைட் கொடுக்குற அளவுக்கு பேசிக்கிட்டே இருக்கார்... அதை அவர் கவனத்துல வெச்சுக்கிட்டா அடுத்தடுத்து சரி செய்துக்கலாம்.
மக்கு: பேனர்- கட்-அவுட்- பாலாபிஷேகம் இல்லாம ஏன் ஓடிடியில ரிலீஸ் பண்ணாங்கன்னு இப்போதான் புரியுது. நாயகி, துணை பாத்திரங்கள் எப்படி?
ஜக்கு: இந்த ஆண்டின் முதல் பாவம் நாயகி நிதி அகர்வால்தான். 'ஈஸ்வரன்', 'பூமி'ன்னு ரெண்டு படங்கள் ரிலீஸ் ஆகியும் அவருக்கு ஸ்கோப் இல்லை. சும்மா கூட்டத்துல ஒருத்தராதான் வந்து போறார். அவரோட கதாபாத்திரம் சரியா எழுதப்படலை. அதுவும் இரண்டாம் பாதியில ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி போஸ் கொடுக்க மட்டுமே பயன்பட்டிருக்கார்.
சரண்யா பொன்வண்ணன் இந்தப் படத்துக்கு எதுக்கு என்ற கேள்விக்கான பதில் இயக்குநருக்குத்தான் தெரியும். அவ்ளோ பெரிய பிரமாதமான நடிகையை வீணடிச்சிருக்காங்க... சதீஷ், ஜான் விஜய், மாரிமுத்துன்னு எல்லோரும் இந்த வீணடிக்கப்பட்ட லிஸ்ட்தான். தம்பி ராமையா 2, 3 காட்சிகள்ல வந்தாலும் மனசுல நின்னுடறார். ராதாரவி கொடுத்த வேலையைக் கச்சிதமா செய்திருக்கார்.
மக்கு: டெக்னிக்கல் டீம்?
ஜக்கு: இமான் இசையில் 2 பாடல்கள் ஓ.கே.ரகம். பின்னணி இசை சுமார். டட்லி ஒளிப்பதிவு படத்துக்கு பலம். ஜான் ஆபிரஹாம், ரூபன் ஆகியோரின் எடிட்டிங்கில் நேர்த்தி தெரியுது. டெக்னிக்கலா பெரிசா பிரச்சினைகள் இல்லை. மேக்கிங், ஸ்கிரிப்ட் ரெண்டும் மிகப்பெரிய சொதப்பல்கள்.
படம் முழுக்க நம்பமுடியாத, கற்பனைக்கு எட்டாத, நாடகத்தனமான, செயற்கையான காட்சிகளே இருக்கு. இதுக்கு மேல என்ன சொல்றது?
மக்கு: எனக்கு ஒண்ணு தோணுதுடா..
ஜக்கு: சொல்லு நண்பா...
மக்கு: 'அறம்' படத்துல செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி சாதனை புரியும் அளவுக்கு விஞ்ஞானத்தில் வளர்ந்த இந்தியா, ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றும் அளவுக்கு ஒரு கருவியைக் கண்டுபிடிக்கலைன்னு சொல்வாங்க...
ஜக்கு: ஆமாம்... அதுக்கென்ன?
மக்கு: அதான்டா... உல்டாவா யோசி. நாசாவுக்கே போய் ஆராய்ச்சி பண்ற விஞ்ஞானி இருக்குற தமிழ்நாட்ல, விவசாயத்தைக் காப்பாத்த ஆள் இல்லையேங்கிற மனக்குறையில, ஆதங்கத்துல டைரக்டர் இப்படி கதை பண்ணியிருக்கார். அந்த விஞ்ஞானியே விவசாயியா மாறி தமிழ்நாட்டு விவசாயிகளைக் காப்பாத்துறார். இப்படி யோசிடா.
ஜக்கு: முதல்ல, கார்ப்பரேட்டுகள்கிட்ட இருந்து விவசாயிகளைக் காப்பாத்துறதை விட தமிழ் சினிமாக்காரங்ககிட்ட இருந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாத்தணும்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago