ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்: தணிக்கைத் துறைத் தலைவர் கருத்து

By செய்திப்பிரிவு

ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தணிக்கைத் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் தணிக்கை செய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என, மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் தலைவர் ப்ரஸூன் ஜோஷி தெரிவித்துள்ளார்.

தகவல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமை வகித்தார். மத்திய தணிக்கைத் துறையின் செயல்பாடுகள் பற்றிப் பேச இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய ஜோஷி, ''திரையரங்குகளில், பொதுவில் திரையிடப்படும் படங்களுக்குத் தணிக்கை இருந்தாலும், ஓடிடி தளங்களுக்கு இல்லை. அந்த ஓடிடி தளங்களில் இருக்கும் படைப்புகள் திரையரங்குகளுக்கு வரும்போது அவை தணிக்கை செய்யப்பட வேண்டும். ஏனென்றால், ஓடிடி தளங்கள் தனி நபரைச் சென்று சேருபவை என்பதால் விதிகள் வேறுபடுகின்றன. ஆனால், இந்தத் தளங்களும் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்'' என்று கூறினார்.

அது எப்படி நடக்கும் என்பது பற்றிய கேள்விகளுக்கு ஜோஷி பதில் கூறவில்லை.

சிங்கப்பூரில் ஓடிடி தணிக்கை பற்றிப் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே, அந்த முறையைப் பின்பற்றலாம் என்று கூறினார். சுயேச்சை எம்.பி.யான கன்னட நடிகை சுமலதா, ஓடிடிக்குத் தணிக்கை கூடாது என்றும், அதில் வரும் படைப்புகள் ஒழுங்காக வகைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

2016-ம் ஆண்டு, தணிக்கைத் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர அமைக்கப்பட்ட ஷ்யாம் பெனகல் தலைமையிலான குழுவும் இதே பரிந்துரையை முன்வைத்திருந்தது நினைவுகூரத்தக்கது. மேலும், இந்தக் கூட்டத்தில் 2013, 2016 குழுக்களின் பரிந்துரைகள் ஏன் அமல்படுத்தப்படவில்லை என்று சிலர் கேட்டபோது, அதற்கான பதிலைக் கூற ஜோஷி அவகாசம் கோரினார்.

ஷோபனா கே நாயர், தி இந்து (ஆங்கிலம்): தமிழில் - கார்த்திக் கிருஷ்ணா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE