சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

By செய்திப்பிரிவு

சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன், பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. பாலாஜி கப்பா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்.

இன்று (ஜனவரி 14) வெளியாகியுள்ள இந்தப் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்றிரவு வரை இந்தப் பேச்சுவார்த்தை நீடித்துள்ளது. 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பிரச்சினையை முன்வைத்து, இந்தப் படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் ஏற்பட்டது நினைவு கூரத்தக்கது.

இறுதியாக 'ஈஸ்வரன்' வெளியீட்டுச் சிக்கல் தீர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. காலையிலே முதல் காட்சி தொடங்கப்பட்டதால், ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால் சிம்பு படங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

'ஈஸ்வரன்' பட வெளியீட்டுக்கு அனுமதி அளித்ததிற்கு, தயாரிப்பாளர் பாலாஜி கப்பா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"'ஈஸ்வரன்' படம் சம்பந்தமாக எங்கள் தரப்பில் அளித்த கோரிக்கையைத் தமிழ்த் திரைப்பட சங்கம் ஏற்றுப் படத்தை வெளியிட ஒப்புதல் அளித்தது. மேற்கண்ட படத்தினை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஒத்துழைப்பு தராத சிம்புவிற்கு நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்போம்"

இவ்வாறு 'ஈஸ்வரன்' தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE