3 வாரங்களுக்குள் எந்த ஓடிடியிலும் வெளியீடு இல்லை: 'ஈஸ்வரன்' தயாரிப்பாளர்

By செய்திப்பிரிவு

3 வாரங்களுக்குள் எந்த ஓடிடியிலும் 'ஈஸ்வரன்' வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் பாலாஜி கப்பா தெரிவித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

பொங்கல் விடுமுறையைக் கணக்கில் வைத்து ஜனவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக விளம்பரப்படுத்தும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில், வெளிநாட்டுவாழ் மக்களுக்காக OLYFLIX என்ற ஓடிடி தளத்திலும் 'ஈஸ்வரன்' வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

ஆனால், ஓடிடியில் வெளியிடுவதால் திரையரங்குகளில் வெளியிட முடியாது என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தங்களுடைய முடிவை மாற்றியது படக்குழு. திரையரங்குகளில் வெளியாகும் அன்று எந்தவொரு ஓடிடி தளத்திலும் வெளியாகாது என்று தெரிவித்தது. இதனால், 'ஈஸ்வரன்' வெளியீட்டுச் சிக்கல் தீர்ந்தது.

தற்போது தங்களுடைய முடிவைத் திரையரங்க உரிமையாளர்களுக்குக் கடிதமாக எழுதியுள்ளார் 'ஈஸ்வரன்' தயாரிப்பாளர் பாலாஜி கப்பா.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் தமிழ்ப் பட ஆர்வலர்கள் கண்டு ரசிப்பதற்காக, அந்த நாடுகளில் 'ஈஸ்வரன்' படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் நிலவுவதால் எங்களுடைய படங்களைப் பணம் கொடுத்துப் பார்க்கும் வசதியைக் கொண்ட OLYFLIX-ல் வெளியிடலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போது எங்கள் முடிவில் மாற்றம் செய்து, மூன்று அல்லது நான்கு வாரத்திற்குப் பிறகே இதுபோன்ற தளங்கள் வாயிலாக வெளிநாடுகளில் வெளியிடுவது என முடிவு எடுத்திருக்கிறோம்.

எனவே 'ஈஸ்வரன்' படம் வெளியாகும் அன்றோ அல்லது அதன் பிறகு மூன்று வாரங்களுக்கு உள்ளோ எந்த விதமான ஓடிடி தளங்களிலும் வெளியாகாது என்று உறுதி கூறுகிறோம். எனவே, திரையரங்க உரிமையாளர்கள் இந்தப் படத்திற்கு நல்ல ஒத்துழைப்பினை நல்கி எங்கள் படம் வெற்றி அடைய உறுதுணை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு பாலாஜி கப்பா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE