ட்ரம்ப்பின் கணக்கு நீக்கம்: ட்விட்டர் நிர்வாகத்தைச் சாடிய கங்கணா

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை நீக்கியதற்காக ட்விட்டர் நிர்வாகத்தை நடிகை கங்கணா ரணாவத் கடுமையாகச் சாடியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான விமர்சனம், மும்பை மாநகராட்சியால் தனது பங்களா இடிப்பு, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துடன் மோதல் எனப் பல சர்ச்சைகளில் நடிகை கங்கணா ரணாவத் சிக்கினார்.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்திருந்தார் கங்கணா. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரைக் கடுமையாகச் சாடி வந்தனர்.

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துப் பதிவிட்டதற்காக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கணக்கை நீக்குவதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது. அந்தக் கணக்கில் பதிவிடப்பட்ட அத்தனை ட்வீட்களும் நீக்கப்பட்டன.

ட்விட்டர் நிர்வாகத்தின் இந்தச் செயலுக்கு நடிகை கங்கணா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''இஸ்லாமிய நாடுகளும், சீனப் பிரச்சாரமும் உங்களை முற்றிலுமாக விலைக்கு வாங்கிவிட்டன. இப்போது நீங்கள் லாபத்தின் பக்கமே நிற்கிறீர்கள். அவர்கள் விரும்புபவற்றைத் தவிர்த்து வேறு எதையும் நீங்கள் சகித்துக் கொள்வதில்லை. உங்கள் சொந்தப் பேராசைகளுக்கு அடிமையாகி விட்டீர்கள்''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE