பிப்ரவரியில் 'ஜகமே தந்திரம்' வெளியீடு

By செய்திப்பிரிவு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தை பிப்ரவரியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

'அசுரன்' படம் வெளியாகும் முன்பே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜகமே தந்திரம்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. ராஜஸ்தான், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் சில முக்கியக் காட்சிகளையும் படமாக்கியுள்ளது படக்குழு.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

படத்தின் பொருட்செலவும் அதிகம் என்பதால், ஓடிடி வெளியீடும் சாத்தியமில்லை என்று முடிவு செய்தது படக்குழு. இதனால், ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு முடிவு செய்தது. ஜனவரி 13-ம் தேதி 'மாஸ்டர்' வெளியாகவுள்ளதால், 'ஜகமே தந்திரம்' படத்தை பிப்ரவரியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

'ஜகமே தந்திரம்' படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் 'ஜகமே தந்திரம்' படத்தைத் தயாரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE