இந்த தேசத்திடமிருந்து எனக்கு பதில் தேவை; எனக்காக குரல் கொடுக்க வேண்டும்: கங்கணா

By ஐஏஎன்எஸ்

தான் உணர்வுரீதியாவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான விமர்சனம், மும்பை மாநகராட்சியால் தனது பங்களா இடிப்பு, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துடன் மோதல் எனப் பல சர்ச்சைகளில் நடிகை கங்கணா ரணாவத் சிக்கினார்.

இதனிடையே ட்விட்டரில் வகுப்புவாதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டதாக நடிகை கங்கணா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சண்டேலுக்கு எதிராக, மும்பை பாந்த்ராவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் (08.01.21) பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் நடிகை கங்கணா ரணாவத், அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் ஆஜராகினர்.

இந்நிலையில் நேற்று கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் தான் உணர்வுரீதியாவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

''நான் உணர்வு ரீதியாகவும், தற்போது உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறேன். இந்த தேசத்திடமிருந்து எனக்கு பதில் தேவை. நான் உங்களுக்காகக் குரல் கொடுத்தேன். நீங்கள் எனக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. இந்த நாட்டின் நலனுக்காக நான் பேசத் தொடங்கிய நாள் முதல் சிலர் என்னைத் துன்புறுத்தத் தொடங்கிவிட்டனர். நான் துன்புறுத்தப்படும்போது ஒட்டுமொத்த நாடும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய வீடு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது. நான் விவசாயிகளின் நலனுக்காக பேசியதால் என் மீது பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன''.

இவ்வாறு கங்கணா அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE