திரையரங்குகளுக்கு 100% இருக்கைக்கு அனுமதி வேண்டும்: அமித் ஷாவுக்கு தயாரிப்பாளர் தாணு கோரிக்கை

திரையரங்குகளுக்கு 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஜனவரி 13-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வெளியீடு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வரைச் சந்தித்து 100% இருக்கைக்கு அனுமதி கோரினார் விஜய். அதனைத் தொடர்ந்து கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், தமிழக அரசு 100% இருக்கைக்கு அனுமதி அளித்தது.

இதனால் தமிழக அரசு கடும் பின்விளைவுகளைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 100% இருக்கைக்கு அனுமதி கொடுத்ததை ரத்து செய்தது. இந்த முடிவால் கடும் பின்விளைவுகளைச் சந்திக்கவுள்ளது 'மாஸ்டர்' படக்குழு.

இதனிடையே, இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவரான தாணு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள நீண்ட கடிதத்தின் சுருக்கம்:

"திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த ஊரடங்கு காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது திரைத்துறைதான். நஷ்டத்தைக் கணக்கிடவே முடியாது. மீளவே சில வருடங்கள் ஆகும். இந்நிலையில் திரைத்துறையும், 50 சதவீத ரசிகர்களுடன் திரையரங்குகளும் இயங்க அனுமதி அளித்திருப்பதற்கு மத்திய அரசுக்கு நன்றி.

இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கின்றன. இதில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி என்று இருந்தால் அது பொருளாதார ரீதியாகத் தயாரிப்பாளர்களுக்கு உதவாது. பேருந்து, விமானம், ரயில்களில் எல்லாம் 100 சதவீத அனுமதி இருக்கிறது. ஆனால் அதைவிடப் பாதுகாப்பான, கட்டுப்பாடுகள் நிறைந்த திரையரங்கச் சூழலுக்கு 50 சதவீத அனுமதிதான் இருக்கிறது. போக்குவரத்துத் துறையை விடத் திரையரங்கச் சூழல் பாதுகாப்பானது.

குறைந்தபட்சம் பொங்கல், சங்கராந்தி, குடியரசு தினம் போன்ற விடுமுறை நாட்களிலாவது 100 சதவீத அனுமதி வேண்டும். அப்படி அனுமதித்தால், பாதிப்பில் முடங்கியிருக்கும் திரைத்துறை மீள உதவியாய் இருக்கும். ரசிகர்களின் பாதுகாப்பு திரைத்துறையின் பொறுப்பு என்பது எங்களுக்குப் புரிகிறது. திரையரங்க உரிமையாளர்கள் அதைச் செய்யத் தயாராக இருக்கின்றனர். எனவே எங்கள் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டிக் கேட்கிறோம்"

இவ்வாறு தாணு குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE