'ராதே' படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும்: சல்மான் கானுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

By ஐஏஎன்எஸ்

சல்மான் கான் நடித்திருக்கும் 'ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்' திரைப்படத்தை 2021 ஈகைத் திருநாளில், திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'ராதே'. 'வெடரன்' என்கிற தென் கொரிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா நெருக்கடி காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் அக்டோபர் மாதத்தில் தான் படப்பிடிப்பு முடிந்தது.

இந்நிலையில் படத்தின் தொலைக்காட்சி, டிஜிட்டல், திரையரங்கு மற்றும் இசை உரிமை என அத்தனையையும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு, ரூ.230 கோடி ரூபாய்க்கு சல்மான் விற்றுவிட்டதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வந்தன. இதையடுத்து, இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் அமைப்புகள், சல்மான் கானுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

இதில், "அன்பார்ந்த சல்மான் கான் அவர்களுக்கு, இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கப் பெறும் என்று நம்புகிறோம். 2020ஆம் ஆண்டு, தேசத்திலிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு மோசமானதாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதில் இந்தியாவில் இருக்கும் திரையரங்க உரிமையாளர்களும் விதிவிலக்கல்ல.

கடந்த 10 மாதங்களில் நூற்றுக்கணக்கான தனித் திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்பட்டு அதனால் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. காருக்கு எரிவாயுவைப் போலத்தான் திரையரங்குகளுக்குத் திரைபப்டங்கள். ரசிகர்களுக்குத் தொடர்ந்து தீனி தராமல் திரையரங்கை நடத்துவது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்று. கடந்த பல வருடங்களாக, தனித் திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைத்ததில் உங்கள் திரைப்படங்களுக்கு முக்கியப் பங்கு இருந்திருக்கிறது. மற்றபடி, அந்தத் திரையரங்குகளை நாடுபவர்களீன் ரசனைக்குத் தீனி போடும் படைப்புகள் குறைவே.

தேசம் முழுவதும் இருக்கும் தனித் திரையரங்குகளை மீட்க வல்ல திரைப்படங்களில் உங்களது ராதே திரைப்படமும் ஒன்று. அப்படி ஒரு திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகும் போது, பொருளாதார ரீதியில் மட்டும் அது உதவியாக இல்லாமல், திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்களின் எதிர்காலத்துக்கு ஒரு நம்பிக்கை கீற்றாகவும் இருக்கும்.

உங்கள் திரைப்படத்தின் வெளியீடை 2021 ஈகைத் திருநாள் அன்று, அனைத்து திரையரங்கிலும் திட்டமிட வேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். ஏனென்றால் அந்த நாளை விட வேறொரு சிறந்த நாள் எங்களுக்குக் கிடைக்காது. உங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் கிடைக்காது. அவர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்.

திரையரங்குகளால் கோவிட்-19 பரவியதாக இன்னும் ஒரு சம்பவம் கூட உலகளவில் எங்கும் நடக்கவில்லை. எனவே விதிமுறைகளைப் பின்பற்றி உங்கள் ரசிகர்களை பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வோம் என்பதி நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று எழுதியுள்ளனர்.

இது குறித்து சல்மான் கான் இன்னும் பதிலளிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE