பாதுகாப்பு, அன்பு, வரவேற்பை உணர்கிறேன்: மும்பைக்குத் திரும்பிய கங்கணா பகிர்வு

By ஐஏஎன்எஸ்

மும்பை நகரத்துக்குத் திரும்பி வந்திருக்கும் நடிகை கங்கணா ரணாவத், செவ்வாய்க்கிழமை அன்று சித்தி விநாயகர் கோயில், தேவி கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வழிபட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு கங்கணா ரணாவத்துக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் பெரும் மோதல் வெடித்தது. நடிகர் சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பல்வேறு துறைகளைக் கடுமையாக விமர்சித்து கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதில் மகாராஷ்டிர அரசாங்கமும், காவல்துறையும் தப்பவில்லை.

இரு தரப்புகளும் மாறி மாறி விமர்சிக்க, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும், நிர்வாகத்தைத் தலிபானுடனும் ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையைப் பெரிதாக்கினார் கங்கணா.

தொடர்ந்து மும்பை பாந்த்ரா பகுதியில் இருந்த கங்கணாவின் அலுவலகக் கட்டிடத்தின் ஒரு பகுதி, விதிகளை மீறிக் கட்டப்பட்டதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கங்கணா வெற்றி கண்டார்.

இந்தச் சர்ச்சைகளுக்குப் பிறகு மும்பை திரும்பியுள்ள கங்கணா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

"எனது அன்பார்ந்த நகரமான மும்பைக்காக நான் குரல் கொடுத்து நின்றபோது நான் சந்தித்த எதிர்ப்பு என்னைக் கலக்கமடையச் செய்தது. இன்று நான் மும்பா தேவி, ஸ்ரீ சித்தி விநாயகரைத் தரிசித்து ஆசி பெற்றேன். பாதுகாப்பு, அன்பு, வரவேற்பை நான் உணர்கிறேன். ஜெய்ஹிந்த், ஜெய் மஹாராஷ்டிரா" என்று கங்கணா இந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE