'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக் பணிகள் பூஜையுடன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

'ஓ மை கடவுளே' படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓ மை கடவுளே'. ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் வெளியாகும் முன்பே, தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியது.

கரோனா அச்சுறுத்தலால் தெலுங்கு ரீமேக் பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது நிலைமை சரியாகி வருவதால், 'ஓ மை கடவுளே' தெலுங்கு ரீமேக் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன. பிவிபி சினிமாஸ் நிறுவனமும், தில் ராஜுவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இந்தப் படத்தின் வசனங்களை தருண் பாஸ்கர் எழுதியுள்ளார். அசோக் செல்வன் கதாபாத்திரத்தில் விஸ்வாக் சென் நடிக்கவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

'ஓ மை கடவுளே' படத்தின் தெலுங்கு ரீமேக் மட்டுமன்றி, இந்தி ரீமேக் உரிமையும் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE