பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் அறை இருந்ததற்கான சுவடே இல்லை: வழக்கறிஞர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவின் அறை இருந்ததிற்கான சுவடே இல்லை என்று வழக்கறிஞர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா இருவருக்கும் இடையே ஆன மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலும், தான் எழுதிய இசைக் கோர்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் ஆட்சேபம் தெரிவித்தாலும், பின்பு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாதத்தில், ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். இளையராஜாவுடன் அவரது ஓர் உதவியாளர் மற்றும் இரண்டு இசை உதவியாளர்கள் செல்லவும் நீதிபதி அனுமதி அளித்தார்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 28) காலை 9 மணியளவில் இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இளையராஜா வரவில்லை. அவருடைய வழக்கறிஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். இளையராஜா அறையின் பூட்டு உடைக்கப்பட்டுப் பொருட்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டிருந்ததால் இளையராஜா மனவேதனையில் இருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறியதாவது:

"இளையராஜா அறையின் சாவி அவரிடம் உள்ளது. ஆனால், இன்று காலை வந்து பார்த்தால் அந்த அறையே இல்லை. அந்த அறை தகர்க்கப்பட்டு, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதைச் சரிபார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தங்களுடைய பிரத்யேக அறையே இல்லை. அது இருந்ததிற்கான சுவடே இல்லை என்பதை இளையராஜாவிடம் தெரிவித்தோம். இதைக் கேட்டவுடன் அவர் மிகவும் மனமுடைந்துவிட்டார்.

'அந்த அறையையும், அதிலிருக்கும் பொருட்களையும் பார்க்க வேண்டும் என்ற முனைப்பில்தான் வரவேண்டும் என்று சொன்னேன். அந்த அறையே இல்லை என்று சொன்னால், நான் அங்கு வந்து என்ன செய்வது, எனக்கு மனவேதனை அதிகமாகும். என்னால் தாங்கிக்கொள்ள இயலாது' என்று இளையராஜா கூறினார். இதனால் அவர் வரவில்லை.

இங்கு ஒரு பெரிய ரெக்கார்டிங் தியேட்டர் உள்ளிட்ட 5 அறைகள் உள்ளன. அவருடைய பத்ம விபூஷண் விருது கூட அந்த அறையில்தான் உள்ளது. அந்த அறைக்குத்தான் அனுமதி மறுத்துவிட்டார்கள்.

மிக முக்கியமான இசைக் குறிப்புகள், புகைப்படங்கள், விருதுகள் என அத்தனையும் குடோனில் போட்டு வைத்திருப்பதை இளையராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று இளையராஜாவுடன் ஆலோசித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும்”.

இவ்வாறு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE