உலக மேடையில் இந்தியத் திறமையாளர்கள் பெருமையோடு நிற்கலாம்: பாஃப்தா முயற்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவில் பாஃப்தா அமைப்பின் முன்னெடுப்பால் உலக மேடையில் இந்தியத் திறமையாளர்கள் பெருமையுடன் நிற்க முடியும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிக் கலைகளுக்கான பிரிட்டிஷ் அகாடமி (பாஃப்தா), ’ப்ரேக்த்ரூ இனிஷியேட்டிவ்’ என்கிற முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் திரைப்படங்கள், விளையாட்டு அல்லது தொலைக்காட்சியில் ஐந்து திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொண்டாடி, அங்கீகரிக்கவுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முயற்சிக்குத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்

இதுபற்றிப் பேசியுள்ள ரஹ்மான், "இந்த முன்னெடுப்பின் மூலம் இந்தியாவில் பாஃப்தா செய்யவிருக்கும் பணிகள் பாலிவுட்டைத் தாண்டின. புதிய திறமையாளர்களைக் கண்டெடுக்க வேண்டும் என்கிற தாகம் எனக்கும், பாஃப்தா அமைப்புக்கும் இருக்கிறது. இந்தப் பார்வையினால் அவர்களுடனான இந்தக் கூட்டு இயல்பாகப் பொருந்தியுள்ளது.

இந்திய சினிமாவின் அழகே அதன் பல்வேறு திரைத் துறைகளில் இருக்கும் பன்முகத்தன்மைதான். உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, இந்தியாவின் திரைத்துறை, கேமிங் துறை, தொலைக்காட்சித் துறை என ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் திறமையாளர்களை இந்தத் திட்டத்தின் மூலம் அடையாளாம் காணவிருக்கிறோம்.

இந்தியத் திறமையாளர்கள் எல்லைகளைத் தாண்டி உலக மேடையில் பெருமையுடன் நிற்கும் வாய்ப்பை, வளரும் திறமையாளர்கள் துறையில் சிறந்த கலைஞர்களிடமிருந்து கற்கும் வாய்ப்பை பாஃப்தா ஏற்படுத்தித் தரவிருக்கிறது. நமது தேசத்தின் பட்டை தீட்டப்படாத வைரங்களைக் கண்டெடுப்பதை நான் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE