சூழல் சரியானால் வரும் ரம்ஜானுக்கு ‘ராதே’ வெளியீடு: சல்மான் கான்

By பிடிஐ

சூழல் சரியானால் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு ‘ராதே’ படம் வெளியாகும் என்று நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

'தபங் 3' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ராதே’. இப்படத்தில் திஷா படானி, ரன்தீப் ஹூடா, பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு வெளியான 'வாண்டட்' ('போக்கிரி') திரைப்படத்தின் அடுத்த பாகமாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படம், 'வெடரன்' என்கிற தென்கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்

‘ராதே’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும், முன்னணி ஓடிடி தளங்களிடம் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்த கேள்விக்கு நடிகர் சல்மான் கான் பதிலளித்துள்ளார்.

தனது 55-வது பிறந்த நாளான நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

''சரியான தருணத்தில் ‘ராதே’ வெளியாகும். இப்போது சூழல் மோசமாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரம்ஜானுக்கு ‘ராதே’ படத்தை வெளியிடத் திட்டமிட்டோம். தற்போது வரும் ரம்ஜானுக்கு வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்.

அனைத்தும் சரியாகிவிட்டால், வரும் ஆண்டு ரம்ஜான் பண்டிகையின்போது இப்படத்தை வெளியிடுவோம் அல்லது எப்போது சூழல் சரியாகிறதோ அப்போது வெளியிடுவோம். படத்தை விட பார்வையாளர்களின் பாதுகாப்பும் உடல்நலமும்தான் மிகவும் முக்கியம்.

‘ராதே படத்தை வெளியிடும்போது அனைவரும் திரையரங்கில் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். ஏதேனும் நடந்தால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதை நாங்கள் வெற்றிகரமாகத் திட்டமிட வேண்டும்''.

இவ்வாறு சல்மான் கான் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த ‘ராதே’ திரைப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘ராதே’ படத்தைத் தொடர்ந்து ‘கிக் 2’ மற்றும் ‘கபி ஈத் கபி தீவாளி’ ஆகிய படங்களில் சல்மான் கான் நடித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE