'நவரசா' ஆந்தாலஜியில் ஹலிதா ஷமீம் விலகல்

By செய்திப்பிரிவு

'நவரசா' ஆந்தாலஜியிலிருந்து இயக்குநர் ஹலிதா ஷமீம் விலகியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் திரையுலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி வருகிறது. இதில் அனைவருமே சம்பளமின்றிப் பணிபுரிந்து வருகிறார்கள். மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா தயாரித்து வரும் இந்த ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'நவரசா' ஆந்தாலஜியில் 9 கதைகளை கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டது. இதில் சில இயக்குநர்கள் தங்களுடைய கதைகளை முடித்துக் கொடுத்துவிட்டார்கள்.

தற்போது இந்த ஆந்தாலஜியிலிருந்து விலகியுள்ளார் ஹலிதா ஷமீம். அவருக்குப் பதிலாக இயக்குநர் சர்ஜுன் இணைந்துள்ளார். 'ஏலே' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் 'மின்மினி' படத்தின் பணிகள் ஆகியவை தொடர்ச்சியாக இருந்ததால், 'நவரசா' கதையிலிருந்து ஹலிதா ஷமீம் விலகிவிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

'ஏலே' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, ஜனவரி வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. 'மின்மினி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE