முதல் பார்வை: ஒரு பக்க கதை

By செய்திப்பிரிவு

மேகா ஆகாஷ் - காளிதாஸ் ஜெயராம் இளம் காதலர்கள். காளிதாஸ் தனது அரியர்ஸை முடித்து வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும் திருமணம் என இருவர் குடும்பமும் சம்மதமும் சொல்லியிருக்கிறது. இந்நிலையில் மேகா ஆகாஷ் கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவல் தெரிய வர, இதனால் மேகா, காளிதாஸ் என இருவருமே அதிர்ச்சியாகிறார்கள். ஏன் அந்த அதிர்ச்சி, அந்த கர்ப்பத்தால் என்னென்ன நடந்தது என்பதே 'ஒரு பக்க கதை'.

நிஜமாகவே ஒரு பக்கத்தில் சொல்லியிருக்க வேண்டிய கதை. அதை நீட்டித்து, கூடுதலாகச் சமுதாயத்துக்காக ஒரு கருத்தையும் சொல்ல வேண்டும் என்று நினைத்த நேரத்தில் பக்கத்தில் இடம் காலியாகிவிட்டிருக்கிறது. ஆனால் இந்த நீளம் மட்டுமே படத்தின் ஒரே பிரதானப் பிரச்சினை.

பாத்திரப் படைப்பு, சின்ன சின்ன முக பாவனைகள், தீவிரமான சூழலில் எட்டிப் பார்க்கும் மெல்லிய நகைச்சுவை, உணர்வுப்பூர்வமாக, யதார்த்தமாகக் கையாளப்பட்டுள்ள சூழல்கள் எனப் பல விதங்களில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் பாராட்ட வைக்கிறார். நடுத்தரக் குடும்ப அமைப்பு, மகளின் நடவடிக்கைகளை அம்மா கவனிக்கும் விதம், இரு வீட்டாரும் உட்கார்ந்து பேசும்போது காளிதாஸ் முன் வைக்கும் கருத்து என முதல் பாதியில் தொடர்ந்து நம்மை மகிழ்ச்சியுடன், நெகிழ்ச்சியுடன் புன்னகைக்க வைக்கிறார். கூடுதலாக முதல் காட்சியில் ஆரம்பித்து படம் முடியும் வரை அவ்வப்போது வந்து, நான் ஒரு அவதாரம், யாரிடமும் சொல்லாதே என்று இந்த எளிமையான கதைக்கு அழகான சிரிப்பைக் கூட்டுகிறான் சிறுவன் ஒருவன்.

காளிதாஸ், மேகா என இருவருக்கும் இது முதல் படம் என்றாலும் இருவருமே சிறப்பான நடிப்பையே தந்திருக்கின்றனர். இது ஒரு வித்தியாசமான கதை என கோலிவுட்டில் தயாராகும் ஒவ்வொரு படத்தை எடுப்பவர்களும் சொல்லிக்கொண்டாலும் 'ஒரு பக்க கதை' நிஜமாகவே வித்தியாசமான, எந்த உலக சினிமாவையும் பிரதி எடுக்காத அசலான சிந்தனை தான். 'சீதக்காதி' படத்தில் இருக்கும் அற்புதம்/மாயாஜாலம் என்கிற விஷயமும், கொஞ்சம் அறிவியலும் இந்தக் கதையில் இருக்கிறது.

அசாதாரண சூழலை இரு வீட்டாரும் எதிர்கொள்ளும் விதம், தொடர்ந்து தெரிய வரும் ஆச்சரியங்கள், அதைக் கடந்து வாழ ஆரம்பிப்பது என இரண்டாவது பாதி ஆரம்பித்து சில நேரம் வரை 'ஒரு பக்க கதை' தெளிந்த நீரோடையாகவே செல்கிறது. அதிலும் முதல் பாதியில் பேசப்படும் விஷயங்களைக் காட்சி, வசனம், நடிப்பு என்னை எல்லா விதங்களிலும் கண்ணியத்தோடே அணுகப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், தேவைப்படும் இடங்களில் அமைதியும் சிறப்பு.

உயர் சிந்தனையையொட்டிய கதையோட்டத்தில், கதை சொல்லப்படும் விதம் எளிமையாக இருக்க வேண்டும் என்கிற விதியை பின்பற்றியிருக்கிறார் தரணீதரன். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதிக எளிமையும், யதார்த்தமுமே படத்தை ஒரு அளவை விட்டு எழ விடாமல் தடுக்கிறது. திரைப்படம் என்கிற ஊடகத்தில் மிகை உணர்வு அத்தியாவசியமானதல்ல, ஆனால் கண்டிப்பாக ஒரு சில இடங்களில் அவசியமாகிறது. அது இந்தப் படத்தின் இரண்டாவது பாதியில் சில காட்சிகளுக்குப் பொருந்தும்.

மேலும் காதல், சிக்கல், திடீரென வரும் தெய்வீகமான ஒரு திருப்பம், அதிலிருந்து மீள்வது என்றிருக்கும் கதை, மூட நம்பிக்கை, மதங்களை வைத்துச் செய்யப்படும் ஏமாற்று வேலை எனக் கருத்துச் சொல்ல ஆரம்பிக்கும்போது வலுவிழக்கிறது. சொல்லப்பட்ட கருத்து கண்டிப்பாகப் போதனையாகவோ, அயர்ச்சியாகவோ இல்லை. அதுவும் இயல்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் கதையின் தன்மை மாறும்போது, கதாபாத்திரங்களின் இயல்பு மாறாமல் இருப்பது பொருத்தமாக இல்லை. சிறுவனின் கதை முடிக்கப்பட்ட விதத்திலிருந்த சுவாரசியம் மொத்தக் கதை முடிந்த விதத்தில் இல்லை.

'ஒரு பக்க கதை'யின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணீதரன், தனது பாணி என்ன என்பதை நிறுவியிருப்பதாகவே தெரிகிறது. அவரது வசனங்கள், கதாபாத்திரங்கள் நடந்து கொள்ளும் விதம், கதையில் வரும் சூழல்கள், முன்வைக்கும் கருத்துகள் என அனைத்துமே தனித்தனியாக அலசிப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியத்தைத் தருகின்றன. அவரது அடுத்த படத்தில் இவை அத்தனையும் ஒழுங்கான விகிதத்தில் சேர்ந்து நம்மை சுவாரசியப்படுத்தும் என்று நம்புவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE