ரஜினி ஆரோக்கியமாக ஓய்வில் இருக்கிறார்; யாருக்கும் பார்க்க அனுமதியில்லை: அப்போலோ நிர்வாகம்

ரஜினி ஆரோக்கியமாக ஓய்வில் இருக்கிறார் எனவும் யாருக்கும் பார்க்க அனுமதியில்லை என்றும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'அண்ணாத்த' படப்பிடிப்பில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு நெகடிவ் என்பது தெரியவந்தது. ஆனாலும், ஹைதராபாத்தில் ரஜினி தனிமைப்படுத்திக் கொண்டார்.

இன்று (டிசம்பர் 25) திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலைச் சீராக இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்தது.

ரஜினி மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் வெளியானவுடன், பலரும் அவரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகிறார்கள். மேலும், அப்போலோ மருத்துவமனைக்குப் பலர் நேரில் சென்றுள்ளனர். பலர் தங்களுடைய சமூக வலைதளத்தில் ரஜினி பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, ரஜினியின் உடல்நிலை குறித்து தற்போது அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

"ரஜினிகாந்தின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. அவர் இன்றிரவு மருத்துவமனையில் இருப்பார். நாளை மேற்கொண்டு அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கப்படும். அவர் ஆரோக்கியமாக, ஓய்வில் இருக்கிறார்.

யாரும் அவரைப் பார்க்க அனுமதி இல்லையென்பதால் யாரும் அவரைப் பார்க்க வர வேண்டாம் என குடும்பத்தினரும், சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அவரது மகள் அவரோடு இருக்கிறார்.

தெலங்கானா ஆளுநர் மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசினார். ரஜினி அவர்கள் வேகமாகக் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்"

இவ்வாறு அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE