நிறைந்த தைரியமுள்ளவர்; கடவுளின் ஆசீர்வாதங்களுடன் விரைவில் குணமடைவார்: ரஜினிக்கு பவன் கல்யாண் வாழ்த்து

By செய்திப்பிரிவு

நிறைந்த தைரியமுள்ளவர்; கடவுளின் ஆசீர்வாதங்களுடன் விரைவில் குணமடைவார் என்று ரஜினிக்கு பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'அண்ணாத்த' படப்பிடிப்பில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு நெகடிவ் என்பது தெரியவந்தது. ஆனாலும், ஹைதராபாத்தில் ரஜினி தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 25) திடீரென்று ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பலரும் அவர் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன்று ஒரு நாள் மட்டும் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவிட்டு, நாளை வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரஜினி பூரண நலம்பெற, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு கரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

ரஜினிகாந்த் அவர்கள் நிறைந்த தைரியமுள்ளவர், அது மட்டுமல்லாது ஆன்மீகம் உள்ளவர். கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்று விரைவில் குணமடைவார்.

அவர் வணங்கும் மாகாவதார் பாபாஜி யின் ஆசீர்வாதங்களைப் பெற்று அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் நம் முன் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்"

இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE