விரும்பாதவர்கள் சொன்ன விஷயங்களைக் கருத்தில் கொண்டுள்ளேன்: விக்னேஷ் சிவன்

By செய்திப்பிரிவு

எனது படத்தை விரும்பாதவர்கள் சொன்ன விஷயங்களைக் கருத்தில் கொண்டுள்ளேன் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18-ம் தேதி வெளியான ஆந்தாலஜி திரைப்படம் 'பாவக் கதைகள்'. இதில் வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தலா ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளனர். இந்தப் படங்கள் அனைத்துமே ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதைகளாகும்.

இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படத்தின் பெயர் 'லவ் பண்ணா உட்றணும்'. அஞ்சலி, கல்கி கேக்லா, பதம்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவ்வளவு கடினமான கதையையும் விக்னேஷ் சிவன் தனது பாணியில் எப்படி இயக்கியுள்ளார் எனப் பலரும் குறிப்பிட்டுப் பாராட்டியதைக் காண முடிந்தது.

தற்போது 'லவ் பண்ணா உட்றணும்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பு தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது:

"இந்தக் கதாபாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்துக் கொடுத்த அஞ்சலி மற்றும் கல்கி கேக்லாவுக்கு மிக்க நன்றி. பத்மகுமார், ஜாஃபர், டோனி மற்றும் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், அவர்களின் சிறந்த உழைப்பைத் தந்ததற்கும் பாராட்டு மற்றும் நன்றி கூற விரும்புகிறேன். எனக்கு உண்மையிலேயே மிக உயர்ந்த அனுபவமாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். உங்களுடன் பணியாற்றியதை ரசித்தேன் சார். அதீதமான திறமையாளர் மற்றும் பணிபுரிய மிகச் சவுகரியமானவர். நரிக்குட்டி கதாபாத்திரத்துக்குக் குரல் கொடுத்ததற்கு நன்றி. ஒட்டுமொத்தமாக இந்தப் படத்துக்குப் பெரிய மதிப்பைக் கூட்டினீர்கள்.

எனது 'லவ் பண்ணா உட்றணும்' படத்தை விரும்பிய அனைவருக்கும் நன்றி. என்றும் உங்கள் பார்வை, கருத்துகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. படத்தை விரும்பாதவர்களுக்கு, நீங்கள் சொன்ன விஷயங்களை நான் கருத்தில் கொண்டுள்ளேன். அடுத்த முறை இன்னும் சிறப்பாக எடுப்பதை உறுதி செய்கிறேன். பாவக் கதைகளுக்கு ரசிகர்களாகிய நீங்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி".

இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE